தமிழகத்தில் குறையும் கொரோனா: இன்று 26,513 பேருக்கு பாதிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி . சென்னையில் ஒரே நாளில் 2,467 பேருக்கு பாசிட்டிவ். இன்று ஒரே நாளில் 496 பேர் உயிரிழப்பு
பூனேவிலிருந்து 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது
பூனேவிலிருந்து 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கடைகள் எதுவுமே திறக்கப்படாத காரணத்தால் அரசின் சார்பில் நடமாடும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடமாடும் மளிகை கடைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், சில நடமாடும் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா நோயாளிகளை மூன்று வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90க்குள் இருந்தால், கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டுமே அரசு மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். 90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள கொரோனா நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும். சுய தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து பிரிவு கொரோனா தொற்றாளர்களும் குப்புற படுப்பதை வழக்கமாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும், மருத்துவ வல்லுனர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை 21 கோடியே 60 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 27 லட்சத்து 80 ஆயிரத்து 58 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 54 நாட்களுக்கு பிறகு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 534இல் இருந்து 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 795 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 100-ல் இருந்து 3 லட்சத்து 31 ஆயிரத்து 895-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 287 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 92 ஆயிரத்து 342இல் இருந்து 2 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றி இருந்து குணமடைந்தோர் விகிதம் 91.60 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.17 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 லட்சத்து 95 ஆயிரத்து 520-ஆக குறைந்துள்ளது. இதுவரை 21 கோடியே 60 லட்சத்து 46 ஆயிரத்து 638 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கொரோனா தங்கள் மேல் பரவாமல் இருப்பதற்கு தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். நீங்களும் மற்றவருக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இன்னும் சில நாட்களில் கொரோனா தொற்று முழுமையாக குறைந்துவிடும். ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மக்களின் கையில்தான் உள்ளது. கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால்தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நாட்டின் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாநிலங்களில் மகாராஷ்ட்ராவும் ஒன்று. அந்த மாநிலத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும் அந்த மாநிலத்தில் தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்புவது கடினமாக உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் ஜூன் மாதத்தில் மட்டும் 60 லட்சம் டோஸ்கள் தடுப்பூசியை செலுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 74 நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழ் நேற்றுதான் குறைந்தது. நேற்று டெல்லி முழுவதும் கொரோனா பாதிப்பு வீதம் 0.99 சதவீதமாக பதிவாகியது. அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை 1.25 சதவீதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியது. உலக சுகாதார அமைப்பான கொரோனா தினசரி பாதிப்பு வீதம் 5 சதவீதத்திற்கும் கீழ் இரு வாரங்கள் தொடர்ந்து காணப்பட்டால் நிலைமை கட்டுக்குள் வந்ததாக கருதலாம் என்று அறிவித்துள்ளது. டெல்லயில் கடந்த 11 நாட்களாக கொரோனா பாதிப்பு வீதம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைவாக பதிவாகி வருகிறது.
Background
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -