இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவிகிதம் வனப்பகுதியால் சூழ்ந்திருக்கிறது என இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 'இந்திய வன நிலை அறிக்கை 2023'ஐ வெளியிட்டார்.  கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வன கணக்கெடுப்புப் பணி எடுக்கப்பட்டு வருகிறது. அதில், பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


இந்தியாவில் நான்கில் ஒரு நிலப்பரப்பு வனப்பகுதி:


2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் மொத்த வனம், மரங்களின் பரப்பளவு 1445 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"நாட்டின் வனம், மரங்களின் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதமாகும். இதில் 7,15,343 சதுர கி.மீ (21.76%) வனப்பகுதி. 1,12,014 சதுர கி.மீ (3.41%) மரங்களாக உள்ளன.


2021 ஆம் ஆண்டின் மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் காடு, மரங்களின் பரப்பளவு 1445 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இதில் வனப்பகுதி 156 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. மரங்களின் அடர்த்தி 1289 சதுர கி.மீ அதிகரித்துள்ளது.


சத்தீஸ்கர் (684 சதுர கி.மீ), உத்தரப்பிரதேசம் (559 சதுர கி.மீ), ஒடிசா (559 சதுர கி.மீ), ராஜஸ்தான் (394 சதுர கி.மீ) ஆகிய மாநிலங்களில் காடு, மரங்களின் அடர்த்தி அதிகமாக உள்ளது. மிசோரம் (242 சதுர கி.மீ), குஜராத் (180 சதுர கி.மீ), ஒடிசா (152 சதுர கி.மீ) ஆகியவை வனப்பகுதியில் அதிகபட்ச அதிகரிப்பைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் ஆகும்.


அதிக வனப்பகுதி கொண்ட மாநிலங்கள்:


பரப்பளவில், மிகப்பெரிய காடு, மரங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (85,724 சதுர கி.மீ), அருணாச்சல பிரதேசம் (67,083 சதுர கி.மீ), மகாராஷ்டிரா (65,383 சதுர கி.மீ) ஆகும்.


பரப்பளவு வாரியாக மிகப்பெரிய வனப்பகுதியைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (77,073 சதுர கி.மீ), அருணாச்சல பிரதேசம் (65,882 சதுர கி.மீ), சத்தீஸ்கர் (55,812 சதுர கி.மீ) ஆகும்.


மொத்த புவியியல் பரப்பளவைப் பொறுத்தவரை, லட்சத்தீவு (91.33 சதவீதம்) அதிக வனப்பகுதியைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்), அந்தமான் - நிக்கோபார் தீவுகள் (81.62 சதவீதம்) உள்ளன.


மிசோரம், லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய எட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது" என இந்திய வன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.