இன்றைய சூழலில், போரில் ஒரு முக்கிய திருப்பமாக, ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரே நேரத்தில் கொத்தாக வரும் ட்ரோன்களை தாக்கி அழிக்க, வான் பாதுகாப்பு அமைப்பின் தேவை அத்தியாவசியமாகிவிட்டது. இந்நிலையில், ஏற்கனவே எஸ்-400 மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்புகள் வான் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில், இன்று புதிய வான் பாதுகாப்பு அமைப்பான பார்கவஸ்திராவை வெற்றிகரமாக சோதித்துள்ளது இந்தியா.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலில் முக்கிய பங்காற்றிய எஸ்-400, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகள்
பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியல் உள்ள தீவிரவாத நிலைகளை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்தது.
அதற்கு அடுத்த கட்டமாக, ஒரே நேரத்தில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஏராளமான தற்கொலை ட்ரோன்கள், பாகிஸ்தானில் விமானப் படைத்தளம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தின. இந்தியாவின் ட்ரோன்களை தடுக்கவோ, முறியடிக்கவோ பாகிஸ்தானால் முடியவில்லை. இந்தியா இன்னும் ஒருபடி மேலே போய், பாகிஸ்தானில் இருந்த சீன தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்பையே தாக்கி அழித்தது.
இந்நிலையில், அதற்கு அடுத்த நாளே, இந்தியா மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் கொத்து கொத்தாக ட்ரோன்களை ஒரே நேரத்தில் அனுப்பியது. ஆனால், பாகிஸ்தானின் பருப்பு இந்தியாவில் வேகவில்லை.
ஏனென்றால், இந்தியா வைத்திருந்ததோ, ரஷ்யாவிடமிருந்து வாங்கிய மிகவும் தரமான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அசத்தலான ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணையும். இவற்றை மீறி, பாகிஸ்தானின் ட்ரோன்களால் இந்திய எல்லைப்பகுதி அருகில் கூட வர முடியவில்லை. அதற்கு முன்னதாகவே தாக்கி அழிக்கப்பட்டன.
இப்படி, எஸ்-400 மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகள், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலில் முக்கிய பங்காற்றின. அதனுடன் தற்போது இன்னொரு பாதுகாப்பு அமைப்பும் இணைய உள்ளது.
வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ‘பார்கவஸ்திரா‘ வான் பாதுகாப்பு அமைப்பு
இந்த சூழலில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பான ‘பார்கவஸ்திரா‘ ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்நாட்டு ஆன்ட்டி ட்ரோன் அமைப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியவை என்பதுதான். இந்த பார்கவஸ்திரா, ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள கடல்வழி ஃபயரிங் ரேஞ்ச் மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
சோதனையின்போது, வானில் பறந்த ட்ரோன்களை இந்த பார்கவஸ்திரா ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கி அழித்தன. இந்த அமைப்பு, 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ட்ரோன்களை தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை.
இந்த ஆன்ட்டி ட்ரோன் அமைப்பை, சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம், எதிரிகள் கூட்டமாக அனுப்பும் ட்ரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலின்போது, குறைந்த விலையில் உருவான ட்ரோன்களே அனுப்பப்பட்டுள்ளன. அதனை அழிக்க, இந்தியா எஸ்-400 போன்ற விலை உயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியது.
ஆனால், இனிமேல், குறைந்த விலையிலான ட்ரோன்களை அழிக்க, குறைந்த விலையில் தயாரிக்கப்படும் பார்கவஸ்திரா ராக்கெட் அமைப்பை இந்தியா பயன்படுத்தலாம். இதனால் செலவும் வெகுவாக குறைவும்.