IND PAK War Tensions: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், யாருக்கு என்ன லாபம் ஏற்படும் என கீழேவிவரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிதான் போர் பதற்றம்:

சில தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் கருமேகங்கள் கடுமையாக சூழ்ந்துள்ளன. அணு ஆயுதம் கொண்ட இருநாடுகளும் எப்போது வேண்டுமானாலும் போர்க்களத்தில் குதிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. ஒரு தரப்பினர் பாகிஸ்தானிற்கு வலுவான பாடம் கற்பிக்க வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினர் எங்களுக்கு அமைதியான வாழ்க்கை தான் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே ஒரு வேளை போர் மூண்டால் யாருக்கு என்ன லாபம் என அலசுவது அவசியமாகிறது.

போரின் விளைவு:

போர் மூண்டால் யாரோ ஒருவருக்கு வெற்றி என்பது கட்டாயம் கிடைக்கும். தற்போதைய சூழல் மற்றும் ராணுவ பலத்தை கருத்தில் கொண்டால், இந்தியாவிற்கே வெற்றி வசமாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால், வெற்றி எனும் அந்த எல்லைக்கோட்டை அடைவதகு முன்பாகவே கடந்த சில தசாப்தங்களாக நாம் கண்டு வரும் வளர்ச்சி என்பது தேங்கிவிடும். இந்த தேக்கம் என்பது வெற்றிக்காக நாம்கொடுக்கும் மிகப்பெரிய விலையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதோடு, பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்ட நாடு என்பதால், சரணடைவதை எளிதில் எதிர்பார்க்க முடியாது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பும் பெரும் சேதத்தை சதிக்க நேரிடும். இது பொருளாதார ரீதியாக பல தசாப்தங்களுக்கு நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

போரின் நேரடி தாக்கங்கள்:

உயிரிழப்புகள்: எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுத்தோம் என மார்தட்டிக் கொண்டாலும், நாமும் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். ராணுவத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் இறக்க நேரிடலாம். இது மக்களிடையே மனதளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

உள்நாட்டிலேயே அகதி வாழ்க்கை: ஆயுத தாக்குதல்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேறி உள்நாட்டிலேயே அகதிகளாக மாறும் சூழல் ஏற்படும். உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்ற அத்தியாவசியங்களுக்கு கூட பிறரை சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படலாம்.

சமூக பிளவு: போர் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தலாம். குடும்பத்தினரை இழப்பது என்பதை தாண்டி, சாதி மற்றும் மத அடிப்படையில் மக்கள் பிரிந்து அமைதியற்ற சூழல் ஏற்படலாம்.

போரின் பொருளாதார தாக்கங்கள்:

  • உட்கட்டமைப்பு பேரழிவு: சாலைகள், மேம்பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிர்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பெரும் சேதத்தை எதிர்கொள்ளும்.
  • மோசமான பொருளாதாரம்: நிதி ஆதாரங்கள் ராணுவத்திற்கு திருப்பப்படுவதால் போரானாது ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, நிலையற்ற பொருளாதார சூழலை ஏற்படுத்தலாம்
  • விநியோக சங்கிலி பாதிப்பு: சர்வதேச நாடுகளுடன் கூடிய விநியோக சங்கிலி பாதிக்கப்படலாம். இதனால் உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயரலாம்
  • புலம்பெயர்வு: போரின் கோர முகத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு புலம்பெயர நேரலாம். இதனால் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடும்.
  • நீண்ட கால பொருளாதார சரிவு: போர் காரணமாக முதலீடுகள் சரிந்து, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு, வளர்ச்சி என்பது இன்றி நீண்ட கால பொருளாதார சரிவில் நாடு சிக்கிக் கொள்ளலாம்.

போரின் அரசியல் தாக்கங்கள்: 

  • சமூக கட்டமைப்பு சிதைவு: போர் ஆனது அரசியல் அமைப்பையும், சமூக கட்டமைப்பையும் பலவீனப்படுத்தி, நிலையற்ற மக்களாட்சி அல்லது சர்வாதிகாரத்தின் ஆட்சிக்கு வழிவகுக்கக் கூடும்.
  • சுதந்திரம் பறிப்பு: போர் நேரங்களில் அரசு பாதுகாப்பு மற்றும் போர்கால சூழல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் பொதுமக்களின் சுதந்திரங்கள் பறிக்கப்படலாம்
  • சர்வாதிகாரம்: போர், எதிர்ப்புகளை அடக்கி ஒழுங்கைப் பராமரிக்கக்கூடிய வலுவான, சர்வாதிகாரத் தலைவர்களின் எழுச்சிக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கக்கூடும்
  • ராணுவ செலவு: வளர்ச்சிக்கு மாற்றாக அரசு ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, எதிர்கால பாதுகாப்பு என்ற பெயரில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்

போரின் சுற்றுச்சூழல் தாக்கங்கள்: 

இயற்கைக்கு பேரழிவு: காடுகள், நீர் நிலைகள், விவசாய நிலங்கள் போன்ற இயற்கை வளங்கள் ஆயுத பயன்பாட்டால் சேதமடையும் 

மாசுபாடு: ஆயுதங்களின் பயன்பாட்டால் நீர், நிலம் மற்றும் காற்று போன்றவை மாசடையும். தொழிற்சாலைகள் சேதமடைவதால் ஆபத்தான வாயுக்கள் கசியலாம்

கன்னிவெடி: கன்னிவெடிகள் பயன்படுத்தப்படுவதால் அதிகப்படியான நிலம் மாசடையலாம். விவசாயம் போன்றவற்றிற்கு எப்போதும் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

பாதிக்கப்பட்ட நாடுகள்:

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் ஆஃப்கானிஸ்தான், சிரியா, உக்ரைன், ஏமன், காங்கோ, சூடான், சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியா என நீளும். இந்த நாடுகள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வல்லமை கொண்டவையாக இல்லாமல் போனதற்கு காரணமே அந்நாடுகளில் தொடர்ந்து நிலவும் போர் பதற்றம் தான். ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால், நாமும் அத்தகைய விளைவுகளை கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும். 

போரை கொண்டாடலாமா?

இப்படி இன்றைய தலைமுறையை கடந்து, அடுத்த தலைமுறையை கூட பாதிக்கும் அளவிற்கு போரால் மோசமான தாக்கங்கள் ஏற்படலாம். வெற்றியாளர், தோல்வி அடைந்தவர் என இன்றி, மேற்குறிப்பிடப்பட்ட பாதிப்புகளை இரண்டு நாடுகளுமே சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால், அதனை உணராமல் சிலர் போர் போர் என அதனை வரவேற்கும் விதமாக பேசி வருகின்றனர். பாதிப்பே இல்லாத ஏதோ ஒரு பகுதியில் இருந்து, பதிலடி கொடுத்த ராணுவத்தின் செயல்பாடுகளை பாராட்டி போரை எதிர்கொள்ள தயார் என கொக்கரிக்கிறோம். ஆனால், தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தின் கடும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களை கேட்டுப்பாருங்கள், இயல்பான, சுதந்திரமான வாழ்கைக்காக அவர்கள் எத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் என புரியும். ஒரு நல்ல தலைவன் தன் மக்களின் நலனை கருத்தில் கொண்டால், எந்த சூழலிலும் போரை விரும்பமாட்டான். அதற்காக எதிரிகள் அடித்தால் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பொருளல்ல. அதற்கான சரியான பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம். அதேநேரம், மக்களின் பாதுகாப்பும் கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு போர் சரியான தேர்வு அல்ல என்பதே உண்மை.