பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியாவின் முப்படைகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்:
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா நடத்தி வரும் நிலையில் இன்று முப்படை அதிகாரிகளான ஏர் மார்ஷல் ஏகே பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத். மேஜர் ஜெனரல் ஷர்தா இணைந்து நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது, "பாகிஸ்தானின் பல இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. பயங்கரவாத கட்டமைப்பை தகர்க்கவே ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தான் இன்றும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். துல்லியமாக திட்டமிட்டு பயங்கரவாத முகாம்கள், பயிற்சியிடங்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகள் கொலை:
காந்தகார் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றோம். பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சார்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர்கள், எவ்வளவு பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை துல்லியமாக கூற இயலாது.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவமோ, பயங்கரவாதிகளோ நுழைய முடியவில்லை. நாம் பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக கொண்டிருந்த நிலையில், நமது இலக்கை பாகிஸ்தானே மாற்றியது. தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று இரவு என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்பாவி மக்கள்:
பாகிஸ்தானின் சில விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். அதன் பாகங்களை ஆய்வு செய்தோம். குறி வைக்கப்பட்ட வான் தாக்குதல்கள் மூலம் நமது இலக்குகளை அடைந்தோம். நவீன யுத்திகள் மூலம் எதிரிகளை ஆராய்ந்து தேர்வு செய்தோம். இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அப்பாவி மக்களை குறிவைத்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக இரு நாட்டு மக்களும் மிகுந்த பதற்றத்திற்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஒப்புதல் மேற்காெண்ட நிலையில் மீண்டும் பாகிஸ்தான் நேற்று இரவு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது இந்தியாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மீண்டும் இந்தியா தாக்குதல் நடத்தியது.