இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும், இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது.


மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மக்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்:


இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேணி வருவதால், இந்திய - மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் இந்தியர்கள், மியான்மர் எல்லைக்குள் விசா இன்றி 16 கிமீ வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, இந்திய - மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்திய எல்லைக்குள் 16 கிமீ வரை விசா இன்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் (Free Movement Regime) ஒரு பகுதியாக இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.


இந்த நிலையில், சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை (Free Movement Regime) உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது இந்தியா. இதனால், எல்லைப்பகுதியில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்தியாவுக்கு செல்ல விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


சாட்டையை சுழற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா:


எக்ஸ் வலைதளத்தில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடுகையில், "இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் எல்லையில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பை பராமரிக்கவும் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் (MHA) முடிவு செய்துள்ளது. 


வெளியுறவு அமைச்சகம் தற்போது அதை ரத்து செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை உடனடியாக இடைநிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.


 






சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்திய - மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த நான்கரை ஆண்டுகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அந்த வழியாக வரும் அனைவரும் விசா பெற்றிருக்க வேண்டும்.


வேலி அமைக்க முயற்சி:


கடந்த 2023ஆம் ஆண்டு, இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேசுகையில், "சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இந்திய-மியான்மர் எல்லையில் சுந்திர நடமாடும் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தவும் மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது" என்றார்.


மணிப்பூருடன் 390 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது மியான்மர். ஆனால், 10 கிமீ தொலைவில் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.