Flight Ticket Cancellation: முன்பதிவு செய்த விமான டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தால், புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
விமான டிக்கெட் ரத்து விதியில் மாற்றம்:
விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதனை ரத்து செய்தால், மொத்த கட்டண தொகையையும் இழக்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் நிதி இழப்புகளை எதிர்கொள்கின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு, விமான டிக்கெட்டுடன் சேர்த்து பயண காப்பீடு நடைமுறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த 2-3 மாதங்களில் அமலுக்கு வர வாய்ப்புள்ள இந்த திட்டத்தால், கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தாலும் சுமார் 80 சதவிகிதம் வரை கட்டண தொகையை பயனர்கள் திரும்பப் பெறமுடியும் என கூறப்படுகிறது.
தற்போதைய நடைமுறை என்ன?
தற்போதைய நடைமுறையின்படி, விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், அதற்கான கட்டணத்தொகையை திரும்ப பயணிக்கு செலுத்தும் வசதி என்பது கிடையாது. ஒருவேளை தனது உடல்நிலை காரணமாகவே கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்ததாக பயணி முழுமயாக நிரூபித்தால், அவரது கட்டணம் முற்றிலுமாக திரும்ப வழங்கப்படும். ஆனால், அது முற்றிலும் நிறுவனத்தைச் சார்ந்த முடிவாகவே உள்ளது. இந்நிலையில் தான் விமான போக்குவரத்து துறை செயலாளர், டிக்கெட்டுடன் கூடிய பயண காப்பீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து, இந்திய விமான சேவை நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.
டிக்கெட் ரத்து - ரீஃபண்டிற்கான காலக்கெடு
காப்பீட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் விமான நிறுவனங்கள் பிரீமியத்தை ஏற்கின்றன. மறுபுறம், காப்பீடு என்பது பயணிகள் அதைத் தேர்வுசெய்தால் வாங்கக்கூடிய ஒரு கூடுதல் சேவையாகும். ஒவ்வொரு டிக்கெட்டிலும் சுமார் ரூ. 50 என்ற நியாயமான பிரீமியத் தொகை வசூலிக்கப்பட்டு, புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் 80% வரை பணத்தைத் திரும்பப் பெற வழிவகுக்கும் என்பது ஆரம்பகட்ட மதிப்பீடுகளாக உள்ளது. பயணம் செய்ய முடியுமா என்ற நிச்சயமற்ற தன்மை, பின்னர் பணத்தை இழக்க நேரிடும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்ற பயம், பலர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கு பெரிய காரணியாக உள்ளது. புதிய நடைமுறை அந்த அச்சத்திற்கான தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.
தொடரும் சிக்கல்களுக்கான தீர்வு:
விமான நிறுவனங்களிடமிருந்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுவது பயணிகளிடையே ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுவதில் தாமதம், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எதிராக விமான நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தும் தொகையின் அளவு மற்றும் டிக்கெட் தொகையைத் திருப்பி கொடுக்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு அதே விமான நிறுவனத்தில் எதிர்கால பயணத்தின்போது டிக்கெட் வாங்க சலுகை ஆகியவை பிரச்னைகளாக நிலவுகிறது. இதனை உணர்ந்த விமான போக்குவரத்து துறை, புதிய காப்பீடு நடைமுறை மட்டுமின்றி, தற்போதைய பணத்தைத் திரும்பப் பெறும் விதிகளை பயணிகளுக்கு எளிதானதாக மாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாம்.