இந்திய பாஸ்போர்ட் குறியீடு பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 75வது இடத்தை பிடித்துள்ளது.
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Indian Passport Entry Visa: விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கான அனுமதியை இரண்டு நாடுகள் திடீரென ரத்து செய்துள்ளன.

Indian Passport Entry Visa: சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில், இந்தியா ஒரே அடியாக 10 இடங்கள் முன்னேறி 75வது இடத்தை பிடித்துள்ளது.
பாஸ்போர்ட் தரவரிசையில் முன்னேற்றம்
ஹென்லே பாஸ்போர்ட் குறியீடு எனப்படும், உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவிற்கான வாரஸ்யமான தகவல் ஒன்றையும் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வலுவான பாஸ்போர்ட்களின் பட்டியலில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், விசா ஏதுமின்றி பயணிக்கக் கூடிய நாடுகளுக்கான பட்டியலானது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை சரிவை கண்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 85வது இடத்தில் நீடித்த நிலையில், தற்போது ஒரே அடியாக 10 இடங்கள் முன்னேறி 75வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜனவரியில் 80வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், தற்போது அது மேலும் வலுவடைந்துள்ளது. ஆனால், விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது. ஜனவரியில் இருந்த 55-ஐ காட்டிலும் அதிகம் என்றாலும், கடந்த 2025ம் ஆண்டு இருந்த 57 என்ற எண்ணிக்கைக்கு குறைவே ஆகும்.
இரண்டு நாடுகளின் திடீர் முடிவு:
எளிமையாக சொல்ல வேண்டுமானால், வலுவான பாஸ்போர்ட்களுக்கான பட்டியலில் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், இந்தியர்களுக்கான விசா இல்லாத அனுமதியை இரண்டு நாடுகள் ரத்து செய்துள்ளன. அது எப்படி சாத்தியம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீடு என்றால் என்ன?
ஹென்லே & பார்ட்னர்ஸ் வெளியிடும் பட்டியலானது, 199 பாஸ்போர்ட்களை உள்ளடக்கியதாகும். 227 வித்தியாசமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எத்தனைக்கு, விசா ஏதுமின்றி குறிப்பிட்ட பாஸ்போர்ட்தாரர்கள் பயணிக்க முடியும் என்பதை பொறுத்தே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மேலும், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் தரவைப் பெற்று, விசா இல்லாத, விசா-ஆன்-அரைவல் மற்றும் மின்னணு பயண அங்கீகாரங்களை உள்ளடக்கி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. எளிமையாக சொன்னால், முன்கூட்டியே எந்தவித ஆவணங்களையும் தயார் செய்யாமல் அதிகப்படியான நாடுகளுக்குள் நுழைய வழிவகுக்கும் பாஸ்போர்ட்களே வலிமையானதாகும். எத்தனை நாடுகளுக்கு அந்த அனுமதி கிடைக்கிறது என்பதை பொறுத்து பட்டியல் தயாராகிறது.
அனுமதியை ரத்து செய்த 2 நாடுகள்
இந்தியர்களுக்கான விசா இல்லாத அனுமதியை ஈரான் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் தான் அண்மையில் ரத்து செய்துள்ளன. வழக்கமான பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கான இலவச அனுமதியை கடந்த நவம்பரில் ஈரான் ரத்து செய்தது. போலி வேலைவாய்ப்புகள் தொடர்பாக இந்தியர்கள் அந்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, பின்பு பணத்திற்காக கடத்தப்படும் வழக்குகள் அதிகமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம், பொலிவியாவானது இ-விசா நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, அந்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே இந்தியர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசா இல்லாத அனுமதி என்ற அங்கீகாரத்தை இந்தியா இழந்துள்ளது.
நாடுகளை இழந்தாலும் பாஸ்போர்ட் வலுவானது எப்படி?
சில நாடுகளுக்கான இலவச அனுமதியை இழந்த பிறகும், வலுவான பாஸ்போர்ட்களுக்கான பட்டியலில் முன்னேறியது எப்படி என சிலருக்கு கேள்வி எழலாம். இந்திய 2 நாடுகளுக்கான விசா இல்லாத அனுமதியை இழந்த அதே காலகட்டத்தில், பல்வேறு நாடுகள் தங்களது வெளியுறவுக் கொளையில் தீவிரமான திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனால் பல நாடுகளும், எண்ணற்ற நாடுகளுக்குள் இலவசமாக நுழையும் அனுமதியை இழந்தன. அதில் குறைவாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. ஒவ்வொரு பாஸ்போர்டும் அணுகக் கூடிய ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு புள்ளியை ஈட்டும். அதன்படி,
- விசா இல்லாத நுழைவு
- குறிப்பிட்ட நாட்டில் இறங்கியதும் விசா
- எல்லையில் வருகையாளருக்கான அனுமதி வழங்குவது
- டிஜிட்டல் முறையில் பெறப்படும் அனுமதி
ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே தூதரகம் மூலம் விண்ணப்பித்து விசா வாங்கி வேண்டி இருந்தலோ அல்லது ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெற வேண்டி இருந்தாலோ அந்த பாஸ்போர்டிற்கு எந்தவொரு மதிப்பெண்ணும் கிடைக்காது. இந்த தரவரிசைப்பட்டியலானது உலக நாடுகளின் வெளியுறவு முடிவுகளால், அவ்வப்போது மாற்றம் காணும்.
Frequently Asked Questions
இந்திய பாஸ்போர்ட் குறியீடு பட்டியலில் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
விசா இன்றி இந்தியர்கள் எத்தனை நாடுகளுக்கு பயணிக்கலாம்?
விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது.
இந்திய பாஸ்போர்ட்டிற்கான விசா இல்லாத அனுமதியை எந்த நாடுகள் ரத்து செய்துள்ளன?
இந்திய பாஸ்போர்ட்டிற்கான விசா இல்லாத அனுமதியை ஈரான் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் ரத்து செய்துள்ளன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீடு என்றால் என்ன?
ஹென்லே & பார்ட்னர்ஸ் வெளியிடும் பட்டியல், 199 பாஸ்போர்ட்களை உள்ளடக்கியது. விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
























