இந்தியாவின்முதல்டிரைவர் இல்லாகாருக்கான தொடக்கவிழாமும்பைபிகேசியில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. இந்தத்திட்டம்எப்படிசெயல்படும்என்று பார்க்கலாம்.
மும்பை நகரத்தின் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா 'பாட் டாக்சி' (Pod Taxi) திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
மும்பையின் மிக முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில், இந்த அதிநவீன போக்குவரத்து சேவையைத் தொடங்க மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்புதல் அளித்தது. இதற்கான தொடக்க பணிக்கு நேற்று மும்பையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
8.8 கி.மீ. தூரத்துக்கு பாதை, 22 நிறுத்தங்கள்
ஆயிரக்கணக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ள BKC பகுதிக்குத் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் போக்குவரத்து பிரச்சனையைத் தீர்ப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சுமார் 8.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தரையிலிருந்து உயர்த்தப்பட்ட தனிப் பாதையில் இந்த பாட் டாக்சிகள் இயக்கப்பட உள்ளன. பாந்த்ரா மற்றும் குர்லா ரயில் நிலையங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில் மொத்தம் 22 நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
6 பேர் பயணிக்கலாம்
முற்றிலும் தானியங்கி முறையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் ஓட்டுநர் இன்றி செயல்படும் இந்த பாட் டாக்சியில், ஒரே நேரத்தில் ஆறு பயணிகள் வரை அமர்ந்து பயணிக்கலாம். மணிக்கு அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வாகனங்கள், எவ்வித ஒலி அல்லது காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்தாத மின்சார வாகனங்களாக செயல்படும். முழுக்க முழுக்க பாதுகாப்பான பயணத்தை இந்த டாக்ஸி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1016 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம்
சுமார் ரூ.1016 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த மாபெரும் திட்டம், அடுத்தடுத்து பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளது. இதன் முதல் கட்டம், குர்லா முனையம் மற்றும் பாந்த்ரா (கிழக்கு) இடையே 3.36 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கும். முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் மக்களின் பயன்பாட்டிற்கு படிப்படியாகக் கொண்டுவரப்படும்.
வெளிநாடுகளில் மட்டுமே சாத்தியம் என நினைக்கப்பட்ட இந்தச் சிறப்பான போக்குவரத்து வசதி, இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமாவது பொதுப்போக்குவரத்துத் துறையில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மும்பைவாசிகளின் தினசரி பயண நேரம் கணிசமாக மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
