இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அமைதி வழியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், இலங்கையில் மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உயிருக்கு பயந்து குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய படைகளை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த வன்முறை அடக்க இந்திய படைகள் அனுப்பப்படாது என்று உறுதிபட தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“ ஊடகங்களில் இந்தியா இலங்கைக்கு தனது படைகளை அனுப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதை மறுக்கிறோம். இது இந்திய அரசின் நிலைப்பாடு அல்ல. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று இலங்கையின் ஜனநாயக நிலைப்பாட்டிற்கும், பொருளாதார மீட்புக்கும் துணை நிற்போம் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி இலங்கையில் ஏற்படும் வன்முறையை அடக்குவதற்கு இந்திய அரசு தனது படைகளை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், இலங்கைக்கு படைகளை அனுப்ப முடியாது என்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.
அதேசமயத்தில் இலங்கையில் இருந்து மக்களும், சிறையில் இருந்து தப்பிய கைதிகளும் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கடலோர காவல்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்