அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.


டிசம்பர் 9ஆம் தேதி நடந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னர், அப்பகுதியிலிருந்து இர தரப்பு வீரர்களும் பின்வாங்கியிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. மோதல் நடந்ததை மத்திய அரசு உறுதி செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது.


இந்நிலையில், இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொள்ளும் பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது எப்போது நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. 


அருணாச்சல பிரதேசத்தில் இந்திய சீன எல்லைபகுதியான உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்திய, சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதி கொள்வது அதில் பதிவாகியுள்ளது. இது, டிசம்பர் 9ஆம் தேதி நடந்த சம்பவம் வதந்திகள் பரவிய நிலையில், இந்திய ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவதும் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குவதும் அதில் பதிவாகியுள்ளது. சீன ராணுவ வீரர்களை, கட்டையை வைத்து இந்திய ராணுவ வீரர்கள் அடிப்பது அதில் பதிவாகியுள்ளது.






2020ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.


இந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 4 சீன வீரர்கள் உயிரிழந்ததாக சீன தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதிலும், அதை விட 9 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.


இந்திய - சீன உறவில் இச்சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரச்சனைக்குரிய இடங்களில் ராணுவ வீரர்களை திரும்ப பெற இரு நாடும் ஒப்பு கொண்டது. இருப்பினும், சில இடங்களில் ராணுவ திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 


கல்வான் சம்பவத்தை தொடர்ந்து, பாங்காங் ஏரியின் தென்கரையில் சிறிய தகராறு ஏற்பட்டது. இம்மாதிரியான சிறிய தகராறு ஏற்பட்டபோதிலும், பெரிய மோதல் வெடிக்காமல் இருந்தது.


கல்வான மோதலுக்கு பிறகு, இந்திய சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.


இதை தொடர்ந்து, லடாக்கில் உள்ள கோக்ரா வெந்நீரூற்று உள்ளிட்ட பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்து இரு தரப்பு ராணுவ வீரர்களும் பின்வாங்கினர். இம்மாதிரியான தகராறு 2006ஆம் ஆண்டிலிருந்து எல்லை வரையறையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நிகழ்ந்து வருகிறது.