Independence Day 2021 Live Updates : 75ஆவது சுதந்திர தின லைவ் அப்டேட்ஸ்: எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இரு நாட்டு வீரர்கள்

இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ​​'தன்னிறைவான இந்தியா' என்கிற நமது இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். மாறிவரும் காலங்களில் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ABP NADU Last Updated: 15 Aug 2021 12:16 PM
எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இரு நாட்டு வீரர்கள்

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.


 





மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது

கொரோனா பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியாவிற்கு கல்பனா சாவ்லா விருது. அவர் சார்பாக அவரது கணவர் விருதை பெற்றுக்கொண்டார்.

75வது சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை நேப்பியர் பாலம் அருகே 75வது சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 42 அடி உயரம் கொண்ட துருப்பிடிக்காத உலோகத்தால் ரூ.1.95 கோடியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இந்த தூணின் மொத்த உயரம் தரை மட்டத்தில் இருந்து 59 அடியாகும். ராணுவத்தினரை போற்றும் விதமாக 4 ராணுவ வீரர்களின் சிலைகள் தூணை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர்களுக்கு கொடியேற்ற உரிமை பெற்றுத்தந்தவர் கருணாநிதி - முதல்வர் ஸ்டாலின்

கோட்டையில் முதல்முறையாக கொடியேற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், “400 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த கோட்டையில் இந்திய நாட்டின் இந்தக் கொடியை ஏற்ற ரத்தம் சிந்திய வீரர்களை வணங்குகிறேன். விண்ணூற்ற கொடியினை ஏற்றும் வாய்ப்பு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம். கோட்டைக்கொத்தளத்தில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சுதந்திர நாளில் முதலமைச்சர் யாரோ அவர்தான் கொடியேற்ற வேண்டும் என்கிற வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமை பெற்றுத்தந்த மாபெரும் சுதந்திர சிந்தனையாளர். ஏராளமான பெருமைகள் இந்த ஆண்டுக்கு உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா. நீதிக்கட்சியின் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான். மகாத்மா காந்தி கதர் ஆடை உடுத்தத்தொடங்கிய நூற்றாண்டு. வ.உ.சிக்கு 150வது பிறந்தநாளும் இந்த ஆண்டுதான். மகாகவி பாரதி மறைவின் நூறாண்டு, எத்தனையோ வரலாற்று நிகழ்வின் 100 ஆண்டு இந்த 2021. திமுக அரசின் 6வது முறை ஆட்சி. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித்தேவர்,வேலுநாச்சி, தீரன் சின்னமலை,மருது சகோதரர்கள், தில்லையாடி வள்ளியம்மை, தந்தைப்பெரியார், திருவி.க., சிங்காரவேலர், திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராஜர், ஜீவா, கேப்டன் லட்சுமி, மா.போ.சி,, கே.பி.சுந்தராம்பாள். இத்தகைய தமிழ்தியாகிகளின் ரத்தம் கொண்டு கட்டப்பட்டது இந்திய சுதந்திரத்தூண். நான் சொன்னவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். அவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை ரூ.17000 லிருந்து ரூ.18000ஆக உயர்த்தப்படும் குடும்ப ஓய்வுதியத்தொகை ரூ,8500லிருந்து ரூ.9000 ஆக உயர்த்தப்படும். சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இந்திய நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என நிதி திரட்டிக் கொடுத்தவர் அண்ணா. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் கண்டனத் தீர்மானம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன்னுக்கு கோட்டை, ராஜாஜி நினைவாலையம், வள்ளியம்மை நினைவு இல்லம், வ.உ.சி செக்கு நினைவுச்சின்னமானது, சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூன் என நாட்டுக்காக உழைத்தவர்களைப் போற்றுகிறோம். வ.உ.சி பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாட்டம். அரசியல் விடுதலை மட்டும் போதாது பொருளாதார விடுதலையும் வேண்டும் என வ.உ.சி. விரும்பினார். எல்லாருக்கும் எல்லாம் என உறுதி கொண்டது  அரசு. கொரோனா மருத்துவ, மனநல நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என பல சிக்கல்களில் கொண்டு நிறுத்திவிட்டது கொரோனா. மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அரசின் 101வது நாள். வெள்ளை அறிக்கை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம், இதில் கொரோனாவை மேலாண்மை செய்து காப்பாற்ற வேண்டியதிலும் வெற்றி கண்டிருக்கிறது. 14வது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆவின் விலை குறைப்பு. மகளிர் இலவசப் பேருந்துப் பயணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், தகைசால் தமிழர் விருது தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 3கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கிண்டி கிங் வளகாத்தில் அமைய உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகம் அறிவியல் பொருளாதாரத்தில் தமிழ்நாடு ஒருசேர வளரவேண்டும். அரசு, தனிமனித பொருளாதாரம் தன்னிறைவு மிக்கதாக வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக மாற வேண்டும். இதைத்தான் நம் தியாகிகள் விரும்பினார்கள் அதற்குதான் போராடினார்கள். அத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 


தமிழ்நாட்டுக்கும் மகாத்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு உடனிருந்து உதவியவர்கள் தமிழர்கள். ஐரோப்பாவுக்கு எப்படி இத்தாலிய மொழியோ அப்படி இந்தியாவுக்குத் தமிழ். மதுரை வந்த மகாத்மாவை மேலாடை துறந்த கதராடை மகாத்மாவாக தமிழ்நாடு  வழியனுப்பி வைக்கப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியகம் 6 கோடி செலவில் புதுபிக்கப்படும். அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். வாழ்க தமிழ்நாடு! வாழ்க இந்தியா’ எனப் பேசி முடித்தார்.

லடாக் பாங்கோங் த்சோவின் கரையில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் கொண்டாடிய சுதந்திர தினம்

தியாகிகளின் ஓய்வூதியம் உயர்வு

தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை அவசியம் தேவை - பிரதமர் மோடி

பிரதமரின் சுதந்திர தின உரையில், “புதிய கல்விக்கொள்கை அவசியம் தேவை.நாட்டின் வளர்ச்சியில் இளைஞர் சமுதாயம் நல்ல முறையில் ஈடுபட புதிய கல்விக்கொள்கை தேவைப்படுகிறது. நாட்டில் துரதிருஷ்டவசமாக மொழிகள் தொடர்பாக நம் நாட்டில் தேவையற்ற விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு ஏழையின் மகனோ, மகளோ தன் தாய்மொழியில் படிக்கும்போது மட்டுமே அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும்” என்று பேசினார்.

கோட்டையில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிய பிறகு கொடியேற்றினார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துதல்;முதலிடத்தில் இந்தியா..!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசினார்.

Background

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று கொண்டாடப்பட்டது.முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. பிறகு சுதந்திரதினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது.விமானப்படையின் வான்வெளி சாகசங்களை புன்னகையுடன் கண்டுகளித்தார் பிரதமர் மோடி. நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


கொடியேற்றி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,’ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கும் தேசத்தை நேசிப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.தேசப் பாதுகாப்பில் இரவு பகலாகத் தம்மை ஈடுபடுத்திவரும் வீரர் வீராங்கனைகளுக்கு இன்று தேசம் தலைவணங்குகிறது. பிஸ்மில், நேதாஜி, ஜான்சி ராணி லட்சுமி பாய், சித்தூர் சென்னம்மா,நாட்டின் முதல் பிரதமர்  நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் என ஒவ்வொருவரையும் தேசம் இன்று நினைவுகூர்கிறது.தேசத்தைப் பாதுகாத்துக்கொண்டிருப்பவர்களை நினைவுகூற வேண்டிய தருணம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் -இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு கணத்தையும் அர்ப்பணித்தவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மைப் பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். இன்று அவர்களின் சாதனையை பாராட்டும்படி நான் தேசத்தை கேட்டுக்கொள்கிறேன்(பிரதாம்ர் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் கரவொலி எழுப்புகிறது).அவர்கள் நம் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல் எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளனர். இந்த தருணத்தில் நாம் பிரிவினையை நினைவுகூற வேண்டும். பிரிவினையின் வலிகளை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. நேற்றைய தினம் ஆகஸ்ட் 14ம் தேதியை பிரிவினை நினைவு தினமாக (Partition Horror remembrance day) அனுசரிக்க அரசு ஒரு உணர்ச்சிபூர்வமான முடிவை எடுத்தது. முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும் நமது நாட்டின் முன்னால், இந்த முழு மனித இனத்தின் முன்னால், கொரோனா ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்திய மக்கள் கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் இந்த போரை சந்தித்துள்ளனர். நமது விஞ்ஞானிகளால், உள்நாட்டிலேயே  மேக் இன் இந்தியாவின் கீழ் இரண்டு கோவிட் தடுப்பூசிகளை உருவாக்க முடிந்தது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் மேற்கொண்டது பெருமிதம் மிக்க விஷயம். நமது அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் பலரை இழந்தோம். இந்தத் தாங்க முடியாத வலி எப்போதும் நம்முடன் இருக்கும். இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நமது இலக்குகளை அடைவதை உறுதி செய்ய வேண்டும். நம்முடைய குறிக்கோள், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்(Minimum government, maximum governance)' என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டும்.


இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ​​'தன்னிறைவான இந்தியா' என்கிற நமது இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். மாறிவரும் காலங்களில் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது. ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா யோஜ்னா, ஓய்வூதிய திட்டம், ஆவாஸ் யோஜ்னா போன்ற திட்டங்களுடன் நமது குடிமக்களை 100 சதவிகிதம் இணைக்க வேண்டும். இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல, இந்த அரசு ஓபிசி மசோதாவை நிறைவேற்றியது. இது நமது நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும்.


நமது வடகிழக்கின் திறனை வெளிக்கொணர்ந்து, நமது தேசத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசாங்கம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஜம்மு -காஷ்மீரில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தங்கள் அங்கே நடந்து வருகின்றன. 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் திறன்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு நமது திறனை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம். இதற்காக, நாம் நாட்டின் பின்தங்கியிருக்கும் பகுதிகளின், பின்தங்கிய பகுதிகளின் கரங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பொதுப் பிரிவினரின் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வது அவசியம். சமீபத்தில் மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாநிலங்களுக்கு சொந்தமாக ஓபிசி பட்டியலை உருவாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது’ இவ்வாறு பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.