மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வரை வேட்பமனு தாக்கல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வேட்பமனு மீதான பரிசீலனை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தங்களது பெயர்களை திரும்பப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் எல். முருகன். மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார். அதே சமயம் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தாராப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எல்.முருகன் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மத்திய இணை அமைச்சரானதும் 2021 ஆம் ஆண்டு எம்.பியாக தேர்வானார் எல்.முருகன்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (ராஜஸ்தான்) பதவிக்காலமும் இந்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது. ஏப்ரல் 2, 2024 அன்று, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் இருந்து தலா 6, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1 ராஜ்யசபா எம்.பி., ஓய்வு பெறுகின்றனர்.