தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு


அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் 2.75 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்:


சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ₹98.21 கோடி மதிப்பீட்டில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் அழகுபடுத்தும் பணி என மொத்தம் 6 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கிறார்.


மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ஆயிரத்து 25 ரூபாயாக சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து 99 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.


ஆயுதபூஜை - பூக்களின் விலை உயர்வு


ஆயுதபூஜையை ஒட்டி தமிழ்நாட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் மல்லிகை, முல்லை, அரளி, சம்பங்கி மற்றும் செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.


வெளியினானது ரஜினியின் வேட்டை:


ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணிக்கு உள்ளது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால்,வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.


லாவோஸ் நாட்டுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி


21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ கிழக்காசிய உச்சி மாநாடு ஆனது, இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகிய சவால்களை கலந்து ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.


தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்


டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான தொழிலதிபர் ரத்தன் டாடா, தனது 86வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரது தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  டாடாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பை NCPA வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.


பாலியல் தொழில் நடத்தி வந்த கும்பலை மடக்கிப் பிடித்த மாவட்ட ஆட்சியர்


ராஜஸ்தான் : ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த கும்பலை போலீஸ் உதவியோடு அதிரடியாக சுற்றிவளைத்த பார்மெர் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி. இதில் 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது. சோதனை செய்ய ஸ்பாவின் கதவைப் பலமுறை தட்டியும் திறக்காததால், அதிகாரிகள் கதவை உடைத்தும், கட்டட மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்தும் தப்பிச்செல்ல முயன்ற கும்பலை மடக்கிப்பிடித்தனர்.


ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு


ஜப்பான் நாடாளுமன்றத்தை(கீழ்சபையை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். இருப்பினும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும்வரை இஷிபாவும், அவரது அமைச்சர்களும் பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கதேசம் உடனான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா


வங்கதேசம் அணிக்கு எதிராக நேற்று டெல்லியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா, 2-0 என கைப்பற்றியுள்ளது.