பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. 


ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும், மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்ற செயல்கள்:


ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவியின் ஆடைகளை கழற்றி குற்றவாளிகள் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த விவகாரத்தில் நீதி வேண்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரணாசியை சேர்ந்த குணால் பாண்டே, ஆனந்த் சவுகான் மற்றும் சக்சம் படேல் ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்:


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி பேசுகையில், "குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களை விரைவில் வெளியிடுவோம். கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி இரவு ஐஐடி - பிஎச்யூ வளாகத்திற்குள் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, உடைகளை களைந்த பின் வீடியோவாக பதிவு செய்தனர்.


சம்பவம் நடந்த அடுத்த நாளே, ஐஐடி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்லூரி வளாகத்தில்  பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அளித்த புகாரில், "நான் ஐஐடி - பிஎச்யூ விடுதியில் வசித்து வருகிறேன். நவம்பர் 2ஆம் தேதி, இரவு 1.30 மணியளவில், நான் எனது ஹாஸ்டலில் இருந்து நடைபயிற்சிக்கு புறப்பட்டேன். 


அப்போது, எனது ஆண் நண்பரை சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக நடந்து செல்லும் போது, மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எனது நண்பரிடம் இருந்து என்னை பிரித்து அழைத்து சென்றனர். என் வாயை இறுக மூடிக்கொண்டு ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, உடைகளை கழற்றி போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்தனர். 


உதவி கேட்டு நான் கூச்சலிட்டபோது, ​​கொலை மிரட்டல் விடுத்தனர். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு என்னை போக அனுமதித்தனர். என் விடுதியை நோக்கி ஓடியபோது மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. பின்னர், நான் ஒரு பேராசிரியர் வீட்டில் ஒளிந்து கொண்டேன். அவர் என்னை பாதுகாப்பு அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றார்" என்றார்.