கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.


கர்நாடகாவில் சட்டசபை தேர்தல்:


தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீட்டி வருகின்றன. அதேநேரம், இந்த தேர்தலில் கூட்டணியின்று தனித்து போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இதனிடையே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் ஏற்கனவே, கர்நாடகாவில் முகாமிட தொடங்கியுள்லனர். தீவிர தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


பரப்புரையை தொடங்கிய காங்கிரஸ் :


இந்நிலையில் கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பெலகாவியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தின் மூலம் தனது தேர்தல் பரப்புரையை  தொடங்கியது. இதில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.


தேர்தல் வாக்குறுதிகள்:


அப்போது “ இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒருபகுதியாக கர்நாடகா வந்தபோது  இம்மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை குறித்து தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு தனியார் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல காலியாக உள்ள 2.5 லட்சம் அரசு வேலைகளை உடனடியாக நிரப்ப உள்ளோம்.


அதோடு,  வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அதேபோல டிப்ளமோ, பாலிடெக்னிக் படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரருக்கு ‘அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல அனைத்து குடும்பத்தினருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்எனவும் ராகுல் காந்தி பேசினார்.


கார்கே பேச்சு:


முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, கர்நாடக பாஜக ஆட்சி நாட்டிலேயே ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. எல்லா துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளும் ஏழைகளும் பெண்களும் பாஜக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.  அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருப்பதால் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது'' என்றார்.