காங்கிரஸில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், கட்சிக்கு உதவ முடியாமல் தவிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேதனையுடன் கூறியுள்ளார்.


பஞ்சாப் காங்கிரஸில் எழுந்த பிரச்னையால் ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும் இடையே முதலில் பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அப்போதே அமரிந்தர் சிங் அதிருப்தி அடைந்தார். பஞ்சாப் காங்கிரஸில் சித்துவின் கை ஓங்கி இருந்தது. இதனைத்தொடர்ந்து, உட்கட்சி மோதலால் பஞ்சாப் முதலமைச்சர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகினார். இதையடுத்து, பஞ்சாப் மாநில முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். புதிய முதல்வராக அம்ரீந்தர் சிங் வாழ்த்து தெரிவித்தாலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியையும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவையும் கடுமையாக விமர்சித்தார். மேலும், எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று கூறிய அமரிந்தர் சிங், பாஜக முத்த தலைவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்து பேசினார். அப்போதே, அவர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார் . சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும்  ராஜினாமா செய்தது காங்கிரஸ் உறுப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை சித்து அனுப்பினார்.


இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸில் இந்தப் பிரச்னை பற்றி எரிவது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபில், ‘டெல்லி காங்கிரஸில் தலைவர் என யாருமே இல்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் கட்சிக்கான முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை’ என வருத்தத்துடன் பகிர்ந்தார். காரிய கமிட்டி கூட்ட வேண்டும் என்று இவருடன் சேர்ந்து, குலாம் நபி ஆசாத்துக்கு வலியுறுத்தினார்.


இதனைத்தொடர்ந்து, கட்சியை விமர்சித்ததாக கூறி கபில்சிபல் வீட்டை காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் தாக்கினார்கள். இதற்கு மூத்த தலைவர் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


இந்த நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் எம்பியின் இல்லத்திற்குள் வெளியே கோஷங்களை எழுப்பும் புகைப்படங்களை பார்க்கும்போது, கட்சிக்குள் அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்க முடியாதபோதும் தான் உதவியற்றவனாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


 






இதனிடையே, உட்கட்சி மோதல், பஞ்சாப் காங்கிரஸ் விவகாரம் குறித்து இன்று காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.