Hyderabad: தெலுங்கானாவில் பா.ஜ.க. எம்.பி வீட்டை டி.ஆர்.எஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பா.ஜ.க. எம்.பி.


தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் தொகுதியின் எம்.பி  தர்மபுரி அரவிந்த். இவர் தெலுங்கானாவின் சட்ட மன்ற உறுப்ப்பினரும், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா கலாவ்குந்த்லா குறித்து அவதூறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த விவகாரம் காரணமாக பாஜக எம்.பி தர்மபுரி அரவிந்த் வீட்டின் மீது டி.ஆர்.எஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள நிஜாமாபாத் பாஜக எம்பி தர்மபுரி அரவிந்த் இல்லத்தின் மீது தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தொண்டர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது, நிஜாமாபாத் பா.ஜ.க. எம்.பி. தர்மபுரி அரவிந்த் நிஜமாபாத்தில் இருந்துள்ளார். 


என்ன காரணம்?


முன்னதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா கலாவ்குந்த்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை அழைத்து காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாக பா.ஜ.க. எம்பி அரவிந்த் தருமபுரி வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தார். இதனால் ஆவேசப்பட்ட தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் பாஜக எம்.பியின் வீட்டை தாக்கியுள்ளனர். 






இந்த சம்பவம் குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் நிஜாமபாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் கூறியுள்ளதாவது, 


முதல்வர் கே சந்திரசேகர ராவ், ஐடி அமைச்சர் கேடி ராமாராவ் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்  கவிதா ஆகியோரின் உத்தரவின் பேரில் ‘டிஆர்எஸ் குண்டர்கள்’ தாக்குதல் நடத்தியுள்ளனர். "அவர்கள் பொருட்களை அழித்து  எனது வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அந்த குண்டர்கள் அவர்கள் என் அம்மாவையும் பயமுறுத்தியுள்ளனர்.


மேலும் அவர் தான் ஹைதராபாத்தில் உள்ள மாநில கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதை பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் டேக் செய்து  பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் சட்ட மன்ற உறுப்பினர் கவிதா தனது தந்தையின் மீதான அதிருப்தியால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். 






இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.