பொது இடத்தில் கர்ப்பிணி மீது அவரது கணவர் செங்கல் வீசி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. மனதை பதைபதைக்க வைக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
மனசாட்சியே இல்ல!
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்த நபர்களால்தான் நடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
பொது இடத்தில் வைத்து கர்ப்பிணி மீது அவரது கணவர் செங்கல் வீசி கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் காணொளி வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கரப்பிணி என்று கூட பாராமல் கொடூரமாக தாக்கிய கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவரான பஷாரத்துக்கு வயது 32. உள்கட்டிட வடிவமைப்பாளராக உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஷபானாவை (வயது 22) இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிற்குச் செல்லும்போது ஷேர் ஆட்டோவில் சந்தித்துள்ளார்.
செங்கல் வீசி சைக்கோ கணவர் கொடூர தாக்குதல்:
பின்னர், இருவரும் காதலித்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள ஷபானா வீட்டிற்குச் சென்றுள்ளார் பஷாரத். இந்த ஜோடி, அதே ஆண்டு, அக்டோபர் மாதம், கொல்கத்தாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஷபானா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னைகள் வர தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி, பலவீனமாக இருந்ததாலும் வாந்தி வந்ததாலும் ஷபானா ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவர் தன்னை கொடுமை செய்து வருவதாக மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 10 மணியளவில், ஷபானாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மருத்துவமனைக்கு வந்துள்ளார் பஷாரத். ஆனால், அவருடன் செல்ல அவர் மறுத்துவிட்டார்.
இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென, கோபப்பட்ட பஷாரத், அவரை வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையில் வீசினார். பின்னர், அவர் அவரது மார்பிலும் தலையிலும் இரண்டு செங்கற்களை வீசி தாக்கினார். கொடூரமாக தாக்கிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து அவர் தப்பி ஓடினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவமனை ஊழியர்கள் ஷபானாவை அடையாளம் கண்டனர். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு பஷாரத் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்" என்றார்.