India G20 Leadership: உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும், 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பிற்ற்கான தலைமை பொறுப்பை இந்தியாவைத் தொடர்ந்து இன்று முதல் பிரேசில் ஏற்றுள்ளது.


ஜி-20 உச்சி மாநாடு:


உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் 20 சக்தி வாய்ந்த நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, ஜி20 அமைப்பின் ஓராண்டிற்கான பதவிக்காலத்தை கடந்த ஆண்டு இந்தியா ஏற்றது. அதனை தொடர்ந்து, ரஷ்யா-உக்ரைன் மோதலில் ஒருமித்த கருத்தை எட்டுவது, ஆப்பிரிக்க யூனியனை இந்த அமைப்பில் அனுமதிப்பது மற்றும் 'சர்வதேச அளவில் தெற்கின் குரல்' என்ற தனது நிலையை உறுதிப்படுத்துவது போன்ற ராஜதந்திர ரீதியாக சவாலான பணிகளை நேர்த்தியாக கையாண்டு, ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.


செப்டம்பர் 9 - 10 தேதிகளில் G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதால், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது அந்தஸ்தை உயர்த்துவதற்கான ஒரு தளத்தை சர்வதேச அளவில் பயன்படுத்திக் கொண்டார்.  இந்த சூழலில்,  மிக உயர்ந்த சர்வதேச பலதரப்பு கூட்டத்தில் இந்தியா எவ்வாறு ராஜதந்திர வெற்றியை நிர்வகித்தது? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.


உக்ரைன் போரில் ஒருமித்த கருத்து:


சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் மாநாட்டில் பங்கேற்காதது,  அனைத்து ஜி 20 உறுப்பினர்களையும் ஒருங்கிணைப்பதற்கான இந்தியாவின் ராஜதந்திர திறன் மீது கேள்விக்குறியாக மாறியது.   இருப்பினும் மாநாட்டின் கூட்டறிக்கையில், உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக ஜி 20 உறுப்பு நாடுகளின் 100 சதவீத ஒருமித்த கருத்து இடம்பெற்றது.  இந்தியாவின் G20 ஷெர்பா அமிதாப் காந்த், கிட்டத்தட்ட 200 மணிநேர இடைவிடாத பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அந்த பிரகடனமானது  உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை" நிலைநிறுத்தியது. அதோடு,  அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது பயன்பாட்டின் அச்சுறுத்தல் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. அதேநேரம் ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


முக்கிய பொருளாதார வழித்தடம்:


ரஷ்யாவிற்கு எதிரான கண்டனங்கள் மென்மையாக இருந்ததை மேற்கத்திய நாடுகள் விரும்பாவிட்டாலும், இந்தியாவை மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் வகையில், ரயில் மற்றும் நீர்வழிகள் மூலம் ஒரு லட்சிய பொருளாதார வழித்தடத்தை தொடங்குவதற்கான் ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சிக்கு போட்டியாகக் கருதப்படும் இந்த நடைபாதையை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் "மிகப் பெரிய விஷயம்" என்று அழைத்தார்.


இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வேகமாக நடைபெறும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார். 


உறுப்பினரான ஐரோப்பிய யூனியன்:


முதல் நாளிலேயே எட்டப்பட்ட டெல்லி உச்சிமாநாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க முடிவு, ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி 20 அமைப்பின் உறுப்பினராக அங்கீகரித்தது தான். இது G20 குழுவிற்குள் தெற்கு பிராந்திய நாடுகளின் குரல் அதிகம் இடம்பெறுவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. G20 அமைப்பு 1999 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து, பெரும்பாலும் G7 நாடுகளால் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா) ஆதிக்கம் செலுத்துகிறது.


ஆச்சரியத்தை தந்த நடவடிக்கைகள்:


சர்வதேச அளவில் ஆச்சரியப்படும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்றாலும், அதில் சில சர்ச்சைகள் இடம்பெற்றதையும் தவிர்க்க முடியாது. சர்வதேச தலைவர்களுக்கு இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயரை கொண்டு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் முன்பு வைக்கப்பட்ட அட்டையில் கூட "பாரத்" என்று எழுதப்பட்டிருந்தது. இது ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போரைத் தொடங்கியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியதால், அவர் மேலும் இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் தங்க வேண்டி இருந்தது. சீன பிரதிநிதிகளின் பையில் சந்தேகிக்கும் வகையிலான பொருட்கள் இருந்ததும் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், ஜி20 அமைப்பின் அடுத்த ஓராண்டிற்கான தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றுள்ளது.