ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை அதிர்ச்சி விபத்து ஒன்று நடந்தது. துபாயிலிருந்து வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது திடீரென ரன்வேயை விட்டு விலகி கடலில் விழுந்தது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இந்த சம்பவத்தில், விமானம் தரையிறங்கும் போது அருகில் இருந்த  வாகனத்தை மோதியதாக கூறப்படுகிறது. அதில் இருந்த இருவரும் உயிரிழந்ததாக உள்ளூர் போலீஸாரின் தெரிவித்தனர். எனினும், சம்பவத்தின் விவரங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.

விபத்து நடந்த விமானம் துருக்கியைச் சேர்ந்த ACT Airlines நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானமாகும். ஹாங்காங் விமான நிலைய கடற்கரையை ஒட்டி பகுதியில் மூழ்கியிருந்த அந்த விமானத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதி வெவ்வேறாகப் பிரிந்திருந்தன. விமானத்தின் பக்கத்தில் அவசர நிலையிலிருந்து வெளியேறும் சறுக்குபாதை (emergency slide) திறந்து இருந்ததாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

விமானத்தில் இருந்த நான்கு குழுவினரும் (crew members) பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 ரன்வே மூடல் – 11 விமானங்கள் ரத்து

இந்த விபத்துக்குப் பிறகு, ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தின்  ரன்வே தற்காலிகமாக மூடப்பட்டது. உலகின் மிகப் பிஸியான சரக்கு விமான மையங்களில் ஒன்றான ஹாங்காங் விமான நிலையத்தில் தற்போது மத்திய மற்றும் தெற்கு ரன்வேக்கள் வழியே விமான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விமான நிலைய அதிகாரிகளின் இணையதளத் தகவல்படி, திங்கட்கிழமை வர இருந்த குறைந்தது 11 சரக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்து இன்று அதிகாலை 3.50 மணியளவில் (உள்ளூர் நேரம்) — ஞாயிற்றுக்கிழமை 19.50 GMT — துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் EK9788 என்ற சரக்கு விமானம் தரையிறங்கிய சில நொடிகளிலேயே ஏற்பட்டது.

எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் தரையிறங்கும் போது சேதமடைந்தது. இது துருக்கியைச் சேர்ந்த ACT Airlines நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு (wet lease) எடுக்கப்பட்ட சரக்கு விமானமாகும். குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எந்த சரக்குமும் விமானத்தில் இல்லை,” என்று கூறப்பட்டுள்ளது.

ஹாங்காங் அரசின் பறக்கும் சேவை (Government Flying Service) ஹெலிகாப்டர்களை ரன்வே பகுதியில் தேடுதல் பணிக்கு அனுப்பியுள்ளதுடன், தீயணைப்பு துறை படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

FlightRadar24 வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, விபத்தில் சிக்கிய விமானம் 32 ஆண்டுகள் பழமையான போயிங் 747 ஆகும். இது முதலில் பயணிகள் விமானமாக சேவையாற்றி பின்னர் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது.