நாகாலாந்தில் உள்ள மோன் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ராணுவத்தினர் பொதுமக்களை தீவிரவாதிகள் என தவறாக நினைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 


இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு, நாகலாந்தில் உள்ள மோன் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற வாகனங்களின் இயக்கத்தையும் தடை செய்து உத்தரவிட்டனர். 


கொடூர தாக்குதலில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என நாகாலாந்து அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை (இன்று) அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ தனது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் நிலைமையை ஆராயவும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் மோன் வருகை தருவார் என தகவல் வெளியாகியது. 


என்ன நடந்தது சனிக்கிழமை..? 


மாலை 6.30 மணி: மோன் மாவட்டத்தின் ஓடிங் கிராமத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற படகு வேனை பாதுகாப்புப் படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


இரவு 7.30: இந்த சம்பவத்திற்கு எதிராக கிராமவாசிகள், ஆயுதங்களை ஏந்தியபடி, பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் பலி; அதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையின் தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் இறந்தனர்.


இரவு 10 மணி: அப்பகுதியில் உள்ள கிராமங்கள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்; இராணுவ வீரர்கள் மோன் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


ஞாயிற்றுக்கிழமை:


காலை 11 மணி: மோன் நகரில் உள்ள கொன்யாக் யூனியன் அலுவலகம் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.


மதியம் 2 மணி: மோன் நகரில் உள்ள அசாம் ரைபிள்ஸ் முகாமைத் தாக்கிய கும்பல், இரண்டு வாகனங்கள் மற்றும் கூடாரங்களுக்கு தீ வைத்தனர். அப்பொழுது,  பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.


மாலை 4 மணி: திங்கட்கிழமை நகரில் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் இணைய சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டன.


மாலை 6 மணி: அடையாளம் தெரியாத ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.


திங்கட்கிழமை


காலை 10 மணி : துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், நாகலாந்தில் மக்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் மாலை 3 மணி அளவிலும், மாநிலங்களவையில் மாலை 4 மணி அளவிலும் விளக்கமளிக்க இருக்கிறார். தற்போது, நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண