100 ஆண்டுகால அயோத்தி பிரச்னை, உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


முலாயம் சிங்கால் பூட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி:


அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.  உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது. 


உத்தர பிரதேச முதலமைச்சராக சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் பதவி வகித்து வந்தபோது, சர்ச்சைக்குரிய பகுதியை மூட உத்தரவிட்டார்.


மசூதியின் அடித்தளத்தில் 4 பாதாள அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் அர்ச்சகரின் வம்சாவளியினர் வசித்து வந்தனர். தற்போது கூட, அந்த அறை, அர்ச்சகர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அர்ச்சகர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என அர்ச்சகரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அதுமட்டும் இன்றி, ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.


ஞானவாபி மசூதியில் நிலவும் அசாதாரண சூழல்:


இதை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது.


கடந்த வாரம், ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. முன்பு இருந்த இந்து கோயிலின் ஒரு பகுதி தற்போது மசூதியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்து கோயிலின் தூண்களில் சிறிய மாற்றங்கள் செய்து அதன்மீது கட்டுமானங்கள் எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டது.


இதனையடுத்து, ஞானவாபி மசூதியின் மூடப்பட்ட அடித்தள பகுதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. மசூதியில் தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை, ஏழு நாட்களில் முடிக்க வேண்டும் என்றும் பூஜைகளை விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


நீதிமன்ற உத்தரவு வெளியானதில் இருந்தே, காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மசூதியில் இந்துக்கள் குவிய தொடங்கினர். மசூதி செல்லும் பாதையை குறிக்கும் வழிகாட்டி பலகையில் மசூதி என்ற வார்த்தையை அகற்றிவிட்டு 'கோயில்' என ராஷ்டிய இந்து தளம் அமைப்பினர் எழுதியது பரபரப்பை கிளப்பியது. அசம்பாவிதத்தை தவிர்க்கும் நோக்கில் மசூதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.