இந்தியாவிற்கான கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்குள் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு சொத்துக் குறிப்பில், இந்தியாவிற்கான கனடா தூதரான கேமரூன் மெக்கே இன்று நேரில் வரவழைக்கப்பட்டு, இந்தியாவை தளமாகக் கொண்ட கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை வெளியேற்றுவது தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள் விவகாரங்களில் கனடா தூதர்களின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவிற்கான இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக மத்திய அரசு கனடா தூதராக மூத்த அதிகாரியை வெளியேற்றியுள்ளது. இதன் மூலம் இருநாடுகளின் உறவு மேலும் விரிசலடைந்துள்ளது.
குற்றச்சாட்டும், எதிர்ப்பும்:
கனடாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக பேசிய அவர், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா உளவு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பு இருக்கலாம், G20 உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேசப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், தற்போது நடைபெறும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியதாகவும்” தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதோடு, கனடா கூறும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் நடத்தும் பயங்கரவாத செயல்களை திசை திருப்பவுமே உதவும்” எனவும் விளக்கமளித்தது.