ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் போராட்டம் நடத்த இருப்பதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சண்டிகர் மேயர் தேர்தலில் முதன்முறையாக இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன.
இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் பதிவானது. எனினும் அதில் 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி செல்லாதவையாக அறிவித்ததால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார். இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனுதாக்கல் செய்தது. அந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேட்டை கண்டித்து இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், “அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் இன்று பாஜக அலுவலகத்தில் அமைதிப் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் பல்வேறு இடங்களில் எங்கள் எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பாஜக பயந்து இந்த போராட்டத்தை நடத்த விடவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன் போராட்ம் நடத்தப்படும் என பா.ஜனதா அறிவித்தது. இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் போராட்டம் அறிவித்ததை அடுத்து தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாஜக அலுவலகம் முன் ஆம் ஆத்மி நிர்வாகிகள் அதிகமாக இருந்ததால், போலீஸார் ஆம் ஆத்மி நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.