இயர்ஃபோன்கள் மற்றும் ஹெட்ஃபோன்களை அதிக நேரம் பயன்படுத்தினால், காது கேளாமை ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
இயர்ஃபோன்/ஹெட்ஃபோன் அதிக நேரம் பயன்படுத்தினால் என்ன ஆகும்.?
இயர்ஃபோன் மற்றும் ஹெட்ஃபோன்கள் பயன்பாடு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தனிப்பட்ட ஆடியோ சாதனங்கள் மூலம், உரத்த இசை மற்றும் பிற ஒலிகளை நீண்ட காலமாகவும், அதிகமாகவும் கேட்பது, மீளமுடியாத செவிப்புலன் சேதத்திற்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுவதாக, சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல் டாக்டர். அதுல் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சாதனங்களை நீண்ட காலமாக பயன்படுத்திய பிறகு, காது கேட்கும் திறன், அதாவது ஒலிகளை கேட்பது மற்றும் வேறுபடுத்தும் திறன் தற்காலிகமாக மாறுவதாக சான்றுகள் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, பாதுகாப்பில்லாமல் நீண்ட நேரம் அவற்றை பயன்படுத்துவதால், காதுகள் கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் என்றும் எச்சரித்துள்ளார். சிலருக்கு காதில் ஏதோ ஒலி கேட்பது போன்றோ, சலசலப்பு சத்தமோ ஏற்படும் எனவும் கோயல் கூறியுள்ளார்.
ஆடியோ சாதனங்களை எவ்வளவு நேரம், எப்படி பயன்படுத்த வேண்டும்.?
இந்த கால இளம் தலைமுறையினரே இதனால் அதிக பாதிப்புக்குள்ளாகும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கும் சுகாதாரத்தறை, ஆன்லைன் கேமிங் அதில் அதிக பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை தவிர்க்க, ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மட்டுமே இயர்ஃபோன், ஹெட்ஃபோன், இயர் பிளக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும், ஒலி அளவு 50 டெசிபல்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவும் இடைவெளிகள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ன.?
இது குறித்து மாநில அரசுகள் இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது மத்திய சுகாதாரத்துறை. குழந்தைகள் ஆன்லைன் கேம்களை விளையாடுவதையும், சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கவும், அரசு சார்பாக அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு, பொது இடங்களில் அதிகபட்ச ஒலி அளவு 100 டெசிபல்களுக்கு மிகாமல் இருப்பதையும், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்கப்படுவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.