கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.


கொரோனா அச்சம்:


அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அமைச்சர்களுடன் நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. நாளை மதியம் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா பணிக்குழு கூட்டம் இன்று வழக்கம் போல் நடைபெற்றது. டாக்டர் வி.கே. பால், டாக்டர் ராஜீவ் பால், டிஜி, ஐசிஎம்ஆர் மற்றும் பிற மூத்த சுகாதார அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கொரோனா தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய இந்த கூட்டம் நடைபெற்றது.


விழிப்புடன் இருக்க வேண்டும்:


இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், "நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால், கவலைப்படத் தேவையில்லை. தற்போது, ​​நாட்டில் பரவும் ஒமைக்ரான் துணை வைரஸ்  மருத்துவமனையில் சேர்க்கப்படுவதன் அவசியத்தை அதிகரிக்கவில்லை" என்றார்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றை காட்டிலும் 20 சதவிகிதம் பேருக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில், பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுவாகும்.


இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயிற்சி ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில், பயிற்சி ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒத்திகை குறித்த பிற தகவல்கள் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும்.


கடந்த பல வாரங்களாகவே, சில மாநிலங்களில் கொரோனா சோதனை குறைவாக நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலைகளை ஒப்பிடும்போது தற்போதைய சோதனை அளவுகள் போதுமானதாக இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.