கேரளாவின் இடதுசாரி அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், இன்று ஆளுநர் மாளிகளையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆரிப் முகமது கான்.






அதில், சில ஆவணங்கள் மற்றும் வீடியோ கிளிப்பிங்குகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள்கிழமை காலை 11.45 மணிக்கு, செய்தியாளர்களை ஆளுநர் சந்திப்பார் என்று ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என்று உறுதியளித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தனக்கு எழுதிய கடிதங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவேன் என்றும் கான் கூறியுள்ளார். 


“இப்போது குறுக்கீடு செய்வதற்குப் பதிலாக, அவர்கள் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்” என்று ஆரிப் வெளிப்படையாகவே குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 


கடந்த 2019 டிசம்பரில் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுக் காங்கிரஸைத் தொடங்கி வைக்கச் சென்றபோது, தன்னை பேச விடாமல் தடுத்த சம்பவத்தின் சில வீடியோ கிளிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார். 


பொதுவெளியில் பேச விடாமல் தடுத்ததே தன்னை பயமுறுத்துவதற்கான சதியின் ஒரு பகுதியாகும் என்றும் மேலும் அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று பினராயி விஜயன் போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஆரிப் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "என்னைப் பகிரங்கமாகப் பேசக் கூடாது என்று பயமுறுத்தவே சதி வேலைதான். நான் மேடையில் இருப்பதை உறுதி செய்ய கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பயன்படுத்தப்பட்டார். பின்னர், தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். 


உள்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர், இந்த சம்பவத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட உத்தரவுகளை வழங்கியிருந்தார். விசாரணை நடத்த வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இது ஐபிசியின் கீழ் பெரிய குற்றமாகும். அவர்கள் என்னைக் கொல்ல விரும்பவில்லை. (அதன்) விளைவுகள் என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் என்னை பயமுறுத்த மட்டுமே விரும்பினர்" என்றார்.