சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் ஜியின் பிறந்த நாளை, குருநானக் ஜெயந்தியாக வருடம் தோறும் சீக்கிய மக்கள் கொண்டாடுகின்றனர். இது சீக்கிய சமூகத்தினரின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குருநானக் ஜெயந்தி விழா இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது.


 சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் தேவ் ஜி சீக்கிய மதத்தை நிறுவியவராவார். குருநானக் ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் குர்புரப் ,சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.


இந்து சந்திர நாட்காட்டியின் படி ஐப்பசி  மாதத்தில் வரும்  பௌர்ணமி நாளில்  குருநானக் ஜெயந்தி வருகிறது. இந்த வருடம் , குர்புராப் நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது .






1469 இல் பாகிஸ்தானில்  நானகா சாஹிப் என்று அழைக்கப்படும் ராய் போய் கி தல்வண்டியில் , அதாவது தற்போதைய லாகூரில் சீக்கியர்களின் குருவான குருநானக் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு  குருநானக்கின் 553 வது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


சீக்கியர்கள் ஒவ்வொரு ஆண்டும் குர்புரப் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊர்வலங்களை நடத்துகின்றனர். அதேபோல் குருத்வாராக்களுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு அன்னதானங்களை வழங்குகிறார்கள். 


குருநானக் ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே குருத்வாராக்களில் 
சீக்கியர்களின் புனித நூலான, குரு கிரந்த் சாஹிபை நாற்பத்தெட்டு மணிநேரம் இடைவிடாது வாசித்து வழிபாடு செய்கிறார்கள். இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்களின் புனித நூலை ஒரு உயர்ந்த மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ,ஒளி வெளிச்சத்துக்கு இடையே வைத்து பிரார்த்தனை செய்யப்படுகிறது.


அதேபோல் குருபுரபிற்கு ஒரு நாள் முன்னதாக, நாகர்கீர்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு  ஐந்து குருமார்கள்  தலைமையில்  குருநானக்கின் புகழை கூறியபடி பக்தர்கள் ஒன்று சேர்ந்து பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.


குருநானக் ஜெயந்தி விழாவையொட்டி சீக்கிய சமூக மக்கள் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். பக்தர்கள் பாடல்களைப் பாடி வழிபாடு செய்வது, அதைத் தொடர்ந்து, குருத்வாராஸில் பொது மக்களுக்கான சிறப்பு மதிய அன்னதானம், அதேபோல் இரவு கூட்டு பிரார்த்தனை அமர்வுகளும்  விடிய விடிய நடைபெறுகிறது.



புனித நூலான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் அலங்கரிக்கப்பட்டு, அதிகாலையில் சீக்கிய மக்களால் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த குர்புரப் கொண்டாட்டத்தில் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஊர்வலத்தின் போது பக்தர்கள்  பாடல்களை பாடி, இனிப்புகளை  வழங்கி, பட்டாசுகளை வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். 


குருநானக் பிறந்த நேரமாக  கூறப்படும் நள்ளிரவு 1:20 மணிக்கு சீக்கிய மக்கள் ஒன்றிணைந்து குர்பானி பாடத் தொடங்குவார்கள். இந்த கொண்டாட்ட நிகழ்வு அதிகாலை 2 மணியளவில் நிறைவடைகிறது.


இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் சீக்கிய மக்கள் தயாரித்து வழங்கும் அன்னதான உணவாகும். சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் இந்த சிறப்பு அன்னதான சேவை வழங்கப்படுகிறது. இதில் பருப்பு, ரொட்டி, சப்ஜி, அல்வா என விதவிதமான உணவு வகைகள் அடங்குமென கூறப்படுகிறது.


பாகிஸ்தானின் லாகூர், குருநானக் தேவ் ஜி பிறந்த இடம் மட்டுமல்ல, அவர் சீக்கிய மதத்தை போதிக்கத் தொடங்கிய இடமாகவும் கருதப்படுகிறது. இதனால் நானகானா சாஹிப்பில் அமைந்துள்ள அழகிய குருத்வாராவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சீக்கிய பக்தர்கள் அங்கு கூடி விழாவைக் கொண்டாடுகின்றனர். குருநானக் பிறந்த ஊரில், அவரிடம் பிரார்த்தனை செய்து, போற்றி புகழும் போது அவருடைய ஆசீர்வாதம்  நேரில் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.


 தனது முப்பதாவது வயதில் ஞானம் பெற்ற குருநானக் மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைய முனைந்தார். மதத்தால் வேறுபட்டு இருந்த மக்களை ஒன்றிணைக்க விரும்பிய குருநானக் பல்வேறு போதனைகளை மேற்கொண்டார். கடவுளின் பாதையை பின்பற்ற  மதங்கள் அல்ல அன்பு வழியிலான பாதை ஒன்றே சிறந்தது என அவர் அன்பை வலியுறுத்தி மேற்கொண்ட போதனைகள் மக்களிடையே விரைவாக பரவியது.


இந்த நாட்களில் ,சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில், ஒளி விளக்குகளால். பொற்தகடுகளால் ஜொலிப்பதை காண முடிகிறது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில்  சிறப்புமிக்க அணிவகுப்புகளும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


 ஆண்கள் பெண்கள் என தமது குடும்பத்தினரோடு குருத்வாராவில் ஒன்று கூடி  சீக்கிய தெய்விகப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள். இதன் பின்னர் நடைபெறும் ஊர்வலத்தில் இளைஞர்கள் பலர்  தங்கள் கைகளில் நீண்ட பட்டை தீட்டப்பட்ட வாள்களை சுழற்றி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைச் செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துவர்.