Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: மகா கும்பமேளாவிலிருந்து பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து, குஜராத்தில் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

Gujarat Road Accident: மகா கும்பமேளாவிலிருந்து பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து, குஜராத்தில் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி:
குஜராத்தின் டாங் மாவட்டத்தில் மகா கும்பமேளாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் உள்ள சபுதாரா பள்ளத்தாக்கில் நாசிக்-சூரத் நெடுஞ்சாலையில் பிரயாக்ராஜிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேபாள பக்தர்கள் 5 பேர் பலி
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மஹா கும்பமேளாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கார், சனிக்கிழமையன்று பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் டிவைடரில் மோதி கவிழ்ந்ததில் நேபாளத்தைச் சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர். மதுபானி நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையில், வேகமாக வந்த எஸ்யூவி, சாலையில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த பைக்கர் மீது மோதாமல் இருக்க முயன்றபோது விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் டிவைடரில் மோதியதில் எஸ்யூவி ஐந்து முறை கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த ஒன்பது பேர் அதில் 5 பேர் இறந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்கள் அர்ச்சனா தாக்கூர், இந்து தேவி, மந்தர்னி தேவி, பால் கிருஷ்ண ஜா மற்றும் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலால் 31 பேர் பலி:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இதுவரை கோடிக்கணக்கனோர் கங்கையில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் தான், கடந்த புதன்கிழமை அன்று, மவுனி அமாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறி 31 பேர் உயிரிழந்ததாகவும், 200 பேர் வரை காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.