கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரம் உலகையே உலக்கியது. இதில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
கலவரத்திற்கு மத்தியில், பிப்ரவரி 28ஆம் தேதி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட சேர்ந்த 17 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொலைக்கான ஆதாரத்தை மறைக்கும் நோக்கில் அந்த உடல்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த 17 பேர் கொலை தொடர்பான வழக்கு குஜராத் பஞ்சமஹால் மாவட்டம் ஹலோல் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்ஷ் திரிவேதி, குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 8 பேர், வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்தனர்.
போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. தீர்ப்பு வழங்கியதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சிங் சோலங்கி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "டெலோல் கிராமத்தில் கலவரம் செய்து இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது" என்றார்.
கடந்த 2002ஆம் ஆண்டு, பிப்ரவரி 27ஆம் தேதி, பஞ்சமஹால் மாவட்டம் கோத்ரா நகரம் அருகே நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கும்பல் ஒன்று தீ வைத்தது. இதில், ரயிலில் பயணம் செய்த 59 பயணிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் ஆவர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. இந்த சூழ்நிலையில்தான், டெலோல் கிராமத்திலும் கலவரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கலவரம் மற்றும் கொலை தொடர்பான இந்திய தண்டனை சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
மற்றொரு காவல்துறை ஆய்வாளர் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக வழக்குப் பதிவு செய்து, கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 22 பேரைக் கைது செய்தார்.
இது தொடர்பாக தகவல் கூறிய வழக்கறிஞர் கோபால் சிங் சோலங்கி, "குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக அரசுத் தரப்பால் போதுமான ஆதாரங்களை சேகரிக்க முடியவில்லை. மேலும் சாட்சிகள் கூட பிறழ் சாட்சியாக மாறியது. பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒரு ஆற்றின் கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து எலும்புகளை போலீசார் மீட்டனர். ஆனால் அவை பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை நிறுவ முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டிருந்தன" என்றார்.