ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. 


மத்திய அரசு பணிகளில் எவ்வளவு இடஒதுக்கீடு?


இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்றால், அமெரிக்க போன்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.


எனவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் நோக்கில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தேர்தலிலும் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது இடஒதுக்கீடு முறை. 


மத்திய அரசு பணிகளை பொறுத்தவரையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்றேிய வகுப்பினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டியல் சமூகத்தை (SC) சேர்ந்த மக்களுக்கு 15 விழுக்காடும் பழங்குடி சமூகத்தை (ST) சேர்ந்த மக்களுக்கு 7.5 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 


மாநில அளவில் மாறுபடும் இடஒதுக்கீடு விகிதம்:


மாநில அரசு பணிகளில், மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு விகிதம் மாறுபடுகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் அதிக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பையே இரண்டாக பிரித்து, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 30 சதவிகிதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 20 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டியல் சமூகத்திற்கு 18 சதவிகிதமும் பழங்குடி சமூகத்திற்கு 1 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


குஜராத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பு: 


இந்த நிலையில், குஜராத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி காந்திநகரில் காங்கிரஸ் ஒரு நாள் முழுவதுமாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியது. நிகழ்ச்சியில் பல்வேறு தலைவர்கள், பஞ்சாயத்துகளில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யாத பாஜக அரசை, கடுமையாக விமர்சித்தனர்.


அதேபோல, ஓபிசி மக்களுக்கான நலத்திட்ட பட்ஜெட்டை அதிகரிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டின. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்காக கடந்த ஜூன் 9ஆம் தேதி, ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.எஸ். ஜாவேரி அடங்கிய ஒரு நபர் குழுவை குஜராத் அரசு அமைத்தது.


கல்வியிலும் சமூக அளவிலும் பின்தங்கிய மக்களுக்கு மட்டும் இன்றி, பெண்களுக்கும் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.