கடந்த 2022ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தேடி தேடி கொலை செய்யப்பட்டனர். இஸ்லாமிய பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். 


குஜராத் கலவரம்:


குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த கொடூரங்கள் அரங்கேறியது. அப்படிப்பட்ட கொடூர சம்பவம்தான் கலோல் கலவரத்தின்போது நடந்தது. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 12க்கும் மேற்பட்டவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த தனிப்பட்ட கலவர வழக்கின் விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 


இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட 26 பேரையும் குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 39 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர். அதில், 13 பேர் வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்தனர். எனவே, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.


போதுமான ஆதாரங்கள் இல்லை: குஜராத் நீதிமன்றம்


கலவரம், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோலில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லீலாபாய் சுடாசமா, குற்றம்சாட்டப்பட்ட 26 பேரையும் விடுதலை செய்தது. 


கடந்த 2002ஆம் ஆண்டு, பிப்ரவரி 27ஆம் தேதி, கோத்ராவில் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, கலோலில் கலவரம் வெடிக்க ஒரு கும்பல் மோசமான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது. இதையடுத்து, மார்ச் 2ஆம் தேதி கலோல் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 


அதிர்ச்சி தீர்ப்பு:


இதையடுத்து, கலோல் கலவர வழக்கில் 190 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 334 ஆதாரங்கள் ஆராயப்பட்டது. ஆனால், இறுதியில், சாட்சிகளிடம் முரண்பாடுகள் இருப்பதாகவும் மேலும் அவர்கள் அரசுத் தரப்பு வாதத்தை ஆதரிக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


கடந்த 2002ஆம் ஆண்டு, மார்ச் 1ஆம் தேதி அன்று, காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.


கடைகளை சேதப்படுத்தி, தீ வைத்தனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் டெம்போவுடன் உயிருடன் எரிக்கப்பட்டார். மசூதியில் இருந்து வெளியே வந்த மற்றொருவரை தாக்கி கொன்ற கும்பல், மசூதிக்குள் அவரது உடலை எரித்தது.