குஜராத் முதற்கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி 18.95 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளது.
89 தொகுதிகளுக்கு உட்பட்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய முதற்கட்ட தேர்தலில் 19 மாவட்டங்களிலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வத்துடன் வரத்தொடங்கியுள்ளனர்.
11 மணி நிலவரம்:
குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 4.62% வாக்கு பதிவானது. தற்போது 11 மணி நிலவரப்படி 18.95% வாக்கு பதிவாகியுள்ளது. வாக்கு பதிவு சூடு பிடித்துள்ள நிலையில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 70 பெண்களும் 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பாஜக காங்கிரஸ் இடையே 89 தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை 2 வேட்பாளர்கள் திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் 87 மட்டுமே உள்ளனர்.
முதற்கட்ட தேர்தல்:
முதற் கட்டமாக நடைபெற உள்ள தேர்தலுக்கு, 25 ஆயிரத்து 434 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகர் பகுதியில் 9 ஆயிரத்து 18 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 16 ஆயிரத்து 416 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.38 ஆயிரத்து 749 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் மொத்தமாக மொத்தமாக 4 கோடியே 91 லட்சத்து 17 ஆயிரத்து 708 பேர் உள்ள நிலையில் , முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 3கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்:
இதில் ஆண்கள் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேரும், பெண்கள் 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் உள்ளனர். முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். இதனால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி சஸ்பெண்ட் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைவரும் கடுமையாக போட்டியிடும் நிலையில், வெற்றி பெறுவது சவால் மிகுந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.