அடுத்தாண்டு ஜனவரி முதல், ஜவுளி, ஆடைகள்,காலணி போன்ற முடிக்கப்பட்ட இறுதி பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தப்படுகிறது. இது, தொடர்பான முறையான அறிவிப்பை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) கடந்த  18ம் தேதி வெளியிட்டது.

  


இந்தியா முழுவதும்  அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நிலையில், இதற்கு பல்வேறு தொழில்துறையினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.




 


துணிகள், ஆடைகள், காலணிகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்த கடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் முன்மொழியப்பட்டது.    


தற்போது ரூ. 1000-க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு மட்டும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், 1000 க்கு குறைவான ஆடைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும்  விதிக்கப்படுகிறது. எனவே, அனைத்து  வகையான  ஆடைகளுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை ( மிகவும் விலை குறைவான ஆடைகளுக்கும் கூட) பயனாளர்கள் செலுத்த வேண்டும். மேலும், அனைத்து விலை மதிப்புமிக்க காலணிகள் மீது 12% ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது.             


தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் இந்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடித்தட்டு மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் பொருள்களின் மீது கூடுதல் வரிச்சுமை விதிக்கப்பட்டால் அது நுகா்வோா் எதிா்மறைத் தன்மையை ஏற்படுத்தும். 


நூல், ஆயத்த ஆடைகளுக்கான உபபொருள்கள், எரிபொருள், பேக்கேஜிங் மற்றும் வாகனப் போக்குவரத்து போன்றவற்றுக்கான செலவு நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பொது முடக்கத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு வணிகத்தின் முந்தைய நிலையை எட்ட, தொழில் வணிகத் துறையினா் கடுமையாகப் போராடி வரும் நிலையில், வரி உயா்வு, ஜவுளித் துறையைப் பெரிதும் முடக்கி விடும். 7 சதவீத வரி உயா்வானது, சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்களை வெகுவாகப் பாதிக்கும்" என்று தெரிவித்தார். 




 


பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம்:


தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் வெளியிட்ட அறிக்கையில்:


மத்திய நிதியமைச்சகம் தற்போது பருத்தி மற்றும் நூலைத் தவிர, இதர ஜவுளிப் பொருட்கள் அனைத்தையும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக ஜவுளித் துறை நீண்ட காலமாக சந்தித்து வந்த உள்ளீட்டு வரி சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. செயற்கை பஞ்சின் மீதான வரி 18-லிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளதால், ஜவுளிப் பொருட்களின் விலையும் குறையும்.


பருத்தி மற்றும் பருத்தி நூலுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 5 சதவீதத்திலேயே தக்க வைத்திருப்பது பருத்தி விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும்.


பஞ்சு, நூல், சாயமிடுதல், துணி பதனிடுதல், பிரிண்டிங் கூலி வேலைகளுக்கு வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாயம் மற்றும் இதர ரசாயன பொருட்களின் வரி 18 சதவீதமாக உள்ளதால் அதிகளவில் உள்ளீட்டு வரி பிரச்சினை இருந்து வந்தது. 12 சதவீத வரியினால் ஜவுளி பதனிடும் கூலித் தொழிலின் உள்ளீட்டு வரிப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.


அதே நேரத்தில் ஆடைகள் மற்றும் துணிகள் மீது 12 சதவீத வரி விதிப்பு என்பது சாமானிய மக்களுக்கு, குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை பாதிக்கும். உற்பத்தியாளர்களுக்கு மூலதன சுமையை அதிகரிக்கும். எனவே, ரூ.1000-க்கு கீழ் மதிப்புள்ள ஆடைகளுக்கு 5 சதவீத வரி விதிப்பை தக்க வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.