ஒடிசாவின் ராய்கடா மாவட்டத்தில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியாததால், மணமகனும் அவரது குடும்பத்தினரும் 28 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மணப்பெண்ணின் கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.


ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்:


கல்யாண்சிங்பூர் தொகுதிக்கு உட்பட்ட சுனகண்டி பஞ்சாயத்தில் இருந்து நேற்று இரவு முழுவதும் நடந்து சென்று திபாலபாடு கிராமத்தை அடைந்துள்ளனர். அங்கு இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சில பெண்கள் இரவில் நடந்து செல்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


இதுகுறித்து மணமகனின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "வாகன வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து வசதி இல்லை. இரவு முழுவதும் நடந்தே கிராமத்தை அடைந்தோம். எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.


வீட்டுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் மணமகன் குடும்பம்:


இன்று, காலை திருமணம் நடைபெற்றது. ஆனால், மணமகனும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் மணமகள் வீட்டில் தங்கும் சூழல் ஏற்பட்டது. ஓட்டுநர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவார்கள் என்று அவர்கள் காத்திருக்கின்றனர்.


இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் போன்ற நலத்திட்டங்களை வலியுறுத்தி புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் டிரைவர் ஏக்தா மகாசங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது.


அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மாநில அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஒடிசாவில் வணிக வாகன ஓட்டுநர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் 90 நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தலைமைச் செயலாளர் பி கே ஜெனா மற்றும் டிஜிபி எஸ் கே பன்சாக் ஆகியோர் வேலைநிறுத்தம் செய்த ஓட்டுநர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்த சில மணி நேரத்தில் டிரைவர்கள் ஏக்தா மகாசங்கின் இந்த அறிவிப்பு வெளியானது.


இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு இடங்களில் அலுவலகம் செல்வோர், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.


ஒடிசாவில் கடந்த 23 ஆண்டுகளாக பிஜு ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. நவீன் பட்நாயக், தொடர்ந்து 5ஆவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். வரும் தேர்தலில், பிஜு ஜனதா தள கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றிபெற வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


இதையும் படிக்க: எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புளுக்குப் பின்னர் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - முதலமைச்சர் அறிவிப்பு..!