ஜிப்மர் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்வை தொடங்கிய போது, தமிழிசை சௌந்தரராஜன் குறுக்கிட்டு தமிழ்த் தாய் வாழ்த்தை பாட வலியுறுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பங்குபெற்ற விழாவில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் என்பதை எங்கள் ஆளுமைக்கு உட்பட்டு தெரிவித்துக்கொள்கிறேன்" என தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டிவியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் செல்வகணபதி மற்றும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகிய முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.




நிகழ்ச்சி தொடங்கியதும் ஜிப்மர் மருத்துவ துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் பாடப்பட்டது நிகழ்ச்சியை தொடங்கினர். அப்போது ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலிடம் தமிழ் தாய் வாழ்த்து பாடல் தவிர்க்கப்பட்டதை தமிழிசை சௌந்தரராஜன் நினைவுபடுத்தி, நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடம்படி  வலியுறுத்தினார்.  இதனையடுத்து துணைநிலை ஆளுநரின் கோரிக்கையை ஏற்று தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியின் இடையே ஒலிபரப்பி பாடப்பட்டது.


தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "ஜிப்மர் நிர்வாகத்தில் சில நேரங்களில் மொழி தெரியாத காரணத்தினால் அவர்களை அறியாமல் செய்யும் சில தவறுகள் வேண்டுமென்று செய்வது போன்று வெளிபட‌கூடாது என்பது எனது ஆதங்கம். நிகழ்ச்சியின் போது தன்வந்திரி வாழ்த்து என்பது அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் பாடுவது வழக்கமானது. அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பாடவில்லை. பின்னர் அவரை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கேட்டபோது, அது குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.




அதற்கிடையில் நிகழ்ச்சி ஆரம்பமானதால், ஆனால் இந்த நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிறைவு பெறக்கூடாது என்பதற்காக  நிகழ்ச்சிக்கு இடையில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதேபோன்று இனி வரும் காலங்களில் தேசியக் கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இந்த கூட்டத்தில் இதை பேச வேண்டுமா என்று தோன்றியது. ஆனால் மேசியா வேண்டியது என்பதால் சொல்லிவிட்டேன். ஆகவே புதுச்சேரியிலும், தமிழகத்தில்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் எந்த நிறுவனமும் இருக்காது என்பது எங்கள் ஆளுமைக்கு உட்பட்டு நாங்கள் உறுதியளிக்கிறோம்," என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.