இத்தாலி நாட்டின் ரோம் நகரில் ஜி-20 மாநாடு கடந்த அக்டோபர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடிய மோடி ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனி குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்டோரையும் சந்தித்தார்.
இதனையடுத்து பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. நவம்பர் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய தேதிகளில் நடந்த இந்த மாநாட்டிலும் பிரதமர் பிற நாட்டு தலைவர்களுடனும் உரையாடினார்.
மாநாடு நேற்று முடிந்ததை அடுத்து அவர் கிளாஸ்கோவிலிருந்து புறப்பட்டார். அங்கிருந்து புறப்படும் முன் கூடியிருந்த இந்தியர்களுடன் பிரதமர் மோடி ட்ரம்ஸ் வாசித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
தனி விமானம் மூலம் நேற்று இரவு 12 மணியளவில் கிளாஸ்கோவிலிருந்து இந்தியா புறப்பட்ட மோடி இன்று காலை 8 மணிக்கு இந்தியா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக ரோமில் நடந்த ஜி 20 மாநாட்டு குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜி 20 உச்சி மாநாட்டில், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தோம்” என பதிவிட்டிருந்தார்.
பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய நரேந்திர மோடி, “பருவநிலை மாற்றம் இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. இது இந்திய விவசாயிகளையும் பாதிக்கிறது. இந்தியாவில், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் உஜ்ஜவாலா போன்ற திட்டங்கள், நமது குடிமக்களுக்கு தத்தெடுப்பு பலன்களை மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி உள்ளன.
பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்களுடன் விவாதிக்க மிகச்சிறந்த வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி கொடுத்துள்ளது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்