உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் அருகில் இருந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிஃப்ட்டில் சிறுவனை வளர்ப்பு நாய் கடித்தது. இதைப்பார்த்த அந்த நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் லிப்டில் இருந்த கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.






அந்த வீடியோவில், நடுத்தர வயது பெண் ஒருவர், தான் வளர்க்கும் செல்ல நாயுடன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிப்ட்டில் பயணம் செய்தார். அந்த நேரத்தில் சிறுவன் ஒருவனும் லிப்ட்டில் பயணம் செய்து தான் இறங்க வேண்டிய தளம் வந்ததும் கதவை நோக்கி செல்லத் தொடங்கியது. அப்போது அந்த நாய் சிறுவனை நோக்கி பாய்ந்து கடித்தது. 


கடித்த நொடியில் சிறுவன் வலியில் கதறி கதவருகே ஒரு காலில் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்து கத்தினார். இதைபார்த்து கொண்டே இருந்த நாயின் உரிமையாளர் சிறிதும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தார். பின்னர் அவர் எதுவுமே நடக்காததுபோல நடந்து செல்கிறார். பிறகு லிட்ப்டுக்குள் ஏறும் ஒருவரிடம் நாய் கடித்தது குறித்து சிறுவன் கூறுகிறான்.


சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ட்விட்டரில் வெளியிடப்பட்ட காட்சிகளின்படி, இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை மாலை உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரின் சார்ம்ஸ் கேஸில் சொசைட்டியில் நடந்ததாக கூறப்படுகிறது.






ட்விட்டர் வீடியோ தற்போது 1024 லைக்குகள் மற்றும் 18.3k பார்வைகளுடன் வைரலாகி வருகிறது. நாயின் உரிமையாளர் நடந்துகொண்ட விதம் குறித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அந்த சம்பத்திற்கு நாயின் உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.