கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அம்மாநில அரசுக்கு தான் அவ்வப்போது நெருக்கடிகளைக் கொடுக்கிறார் என்று பார்த்தால் பத்திரிகையாளர்களையும் பதறவைத்திருக்கிறார். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. 


கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையொட்டி ராஜ்பவன் பல்வேறு ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பின் பேரில் நிகழ்விடத்திற்கு பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கேரள ஆளுநர், இங்கே கைராலி டிவி, மீடியா ஒன் பத்திரிகையாளர்கள் இல்லை என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தால் வெளியே செல்லலாம். நான் கைராலி நிருபரிடம் பேச விரும்பவில்லை. அதேபோல் மீடியா ஒன் பத்திரிகையாளரிடமும் பேச விரும்பவில்லை. இந்த இரண்டு சேனல்களும் திட்டமிட்டே என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றன என்றார். ஆனால் அந்த இரண்டு ஊடகத்தைச் சேர்ந்த நிருபர்கள் தங்களுக்கு முறைப்படி ராஜ்பவனில் இருந்து அழைப்பு வந்திருப்பதை சுட்டிக்காட்டினர். ஆனாலும் ஆளுநர் பிடிவாதம் காட்ட இருவரும் வெளியேறினர்.






கைராலி சேனல் கம்யூனிஸ்ட் கட்சி பின்னணி கொண்டது. மீடியா ஒன் பத்திரிகை ஜமாத் இ இஸ்லாமி அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்த இரண்டு ஊடக நிருபர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பை கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது. நாளை நவம்பர் 8ஆம் தேதி ராஜ்பவன் நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்போவதாக பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கைராலி, மீடியா ஒன் பத்திரிகையாளர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த எர்ணாகுளம் விருந்தினர் மாளிகைக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை. ஜெய் ஹிந்த் டிவியும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி பெற்றிருந்த நிலையில் அதற்கும் அனுமதி மற்க்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஜனநாயக விரோத போக்கினை கடைபிடிக்கிறார். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை அவரிடம் இல்லை. ஏற்கெனவே ஆளுநரின் இந்த வெறுப்பை சுட்டிக்காட்டி எச்சரித்திருந்தோம். ஆனால் இப்போது மீண்டும் அதே போக்கினை ஆளுநர் கடைபிடித்துள்ளார். இதனால் ராஜ்பவனை நோக்கி கண்டனப் பேரணி செல்கிறோம். இந்த விஷயத்தில் ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அந்த அமைப்பின் தலைவர் வினிதா எம்வி மற்றும் ஆர் கிரண்பாபு வலியுறுத்தியுள்ளனர்.


இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷனும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒருசில மீடியாக்களை மட்டும் குறிவைத்து அந்த நிருபர்களை அவமதித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. யாராக இருந்தாலும், என்ன பதவியிலிருந்தாலும் ஊடகத்தை அடக்குவது ஜனநாயக விரோத போக்கு. அரசியல் சாசனப் பதவியில் இருக்கும் ஆளுநர் அதன் மாண்பைக் கெடுக்கக் கூடாது. ஊடகங்களை தவிர்ப்பது பாசிஸ போக்கு. இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று கூறியுள்ளார்.


கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரள அரசுடன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆகையால் வரும் 15 ஆம் தேதி ஆளும் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தின் திமுக தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநரைக் கொண்டு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் இந்தப் போக்கைக் கண்டித்தே நவம்பர் 15ல் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒருமித்த கருத்து கொண்ட திமுக பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்” என்றும் சிபிஎம் மூத்த தலைவர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.