காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு,  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். 






தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காந்தி ஜெயந்தி நாளில் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவரது காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, ஒட்டுமொத்த மனித குலத்தினரிடையே  ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேலும் வளர்க்கத் தூண்டுகிறது. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். ஒவ்வொரு இளைஞனும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக, ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அவரது எண்ணங்கள் உதவட்டும்” என தெரிவித்துள்ளார். 


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து செய்தி மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டிருந்தார். அதில், “நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும், தேச தந்தை மகாத்மா காந்திக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். காந்தியின் அடையாளமான உண்மை மற்றும் அகிம்சை உலகிற்கே புதிய பாதையை காட்டியது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைக்காக மட்டும் போராடவில்லை. துய்மையை பேணுதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், தற்சார்பு, விவசாயிகள் உரிமை ஆகியவைகளுக்காக குரல் கொடுத்தார். மேலும்  தீண்டாமை கொடுமை, சமூக பாகுபாடு, சமூக அறியாமை ஆகியவற்றை எதிர்த்தும்  போராடினார். இதேபோல் காந்தி சுதந்திர போராட்டத்தில் மக்களை அதிக அளவில் பங்கெடுக்க வைத்து நாடு விடுதலையடைய வழிவகுத்தார்.


மார்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா போன்ற பல உலகத்தலைவர்கள் காந்தியின் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றுள்ளனர். அவரது துடிப்பு மிக்க வலிமையான எண்ணங்கள் எப்போதும் உலகிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும். மக்கள் அனைவரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டின் நலனுக்காக  காந்தியின் போதனைகள், செயல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:  Gandhi Jayanti 2023: "தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதே பெரிய அவமானம்" - தவிர்க்க முடியாத மகாத்மாவின் பொன்மொழிகள்