ஜி-20 மாநாட்டை, அடுத்தாண்டு தலைமையேற்று நடத்துவதற்கான பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இதையடுத்து, ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொருட்டு அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு, இன்று மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆலோசனை கூட்டம்:
இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிரிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் பல மாநிலங்களிலிருந்தும் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு குறித்து இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ஜி-20 மாநாட்டை எப்படி நடத்துவது, அதற்கான விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தலாம என்பது குறித்து மாநில தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
ஜி- நாடுகள்:
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டில், இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.