உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பே ஜி-20 அமைப்பாகும். உலக பொருளாதாரம், சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
தற்போதைய ஜி-20 குழுவின் தலைவராக உள்ள இந்தோனேசியாவிடம் இருந்து ஜி - 20 தலைவர் பதவியை இந்தியா டிசம்பர் 1ஆம் தேதி ஏற்க உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்தாண்டு ஜி - 20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜி - 20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா ஏற்கவிருப்பதை ஜி20 நாடுகளின் தூதர்கள் சங்குகளை ஊதி வரவேற்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் தூதர்கள் கலந்து கொண்டனர்.
40க்கும் மேற்பட்ட சர்வதேச தூதர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சனிக்கிழமை அன்று சென்றிருந்தனர். அங்கு, ஜி - 20 நாடுகளின் தூதர்களிடம் இந்திய அரசின் அதிகாரிகள், அடுத்தாண்டு நடைபெற உள்ள உச்ச மாநாடு குறித்து விவரித்தனர்.
இதுகுறித்து அரசு தரப்பு கூறுகையில், "இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி - 20 மாநாட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஜி - 20 அமைப்பின் இந்திய அரசு பிரதிநிதி அமிதாப் காந்த், ஜி - 20 அமைப்பின் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு விளக்கவுரை அளித்தனர்.
டிஜிட்டல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு; காலநிலை நடவடிக்கை, நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு; சுத்தமான, நிலையான மற்றும் உள்ளடக்கிய ஆற்றல் ஆதாரங்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிறகு, யோகா பயிற்சி மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். "கடற்கரையை சுத்தம் செய்தல் என்பது நமது பிரபஞ்சத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் நிலையான வாழ்க்கை முறையின் ஒரு அங்கம். 'ஒரே பூமி' அணுகுமுறையையே இது குறிக்கிறது" என அரசு தெரிவித்துள்ளது.
ஜி-20 இந்திய தலைமை பதவிக்கான லோகோ, தீம் மற்றும் வலைத்தளத்தை பிரதமர் மோடி நவம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டார். தேசியக் கொடியின் நான்கு வண்ணங்களால் லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தாமரையின் மேல் பூமி அமர்ந்திருப்பது போல காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள ஏழு இதழ்கள் என்பது ஏழு கடல்களையும் ஏழு கண்டங்களை ஒன்றிணைப்பதை குறிக்கிறது.
டெல்லி மாநாட்டின் தீம்-ஆக 'வசுதேவ குடும்பகம்: ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தவிர, ஜி 20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இடம்பெற்றுள்ளது.