ஏழை மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! KASP திட்டம்: எப்படி பயன்பெறுவது? முழு விபரம் இதோ
கேரள சுகாதார அமைப்பு இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒரு குடும்பத்திற்கான வருடாந்திர பிரீமியம் ரூ.1,050 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில அரசு ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் விதமாக 'காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா பத்வதி' (KASP) எனும் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.250 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை இடது ஜனநாயக முன்னணி ஆட்சி 2.0-ன் கீழ் ரூ.4,618 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 41.99 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக கேரள சுகாதாரத்துறை அமைப்பு கூறுகிறது. மேலும் கேரள சுகாதார அமைப்பு இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒரு குடும்பத்திற்கான வருடாந்திர பிரீமியம் ரூ.1,050 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள் எந்த அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் பணமில்லா சிகிச்சையைப் பெறலாம். இந்த காப்பீட்டில் மருந்துகள், பரிசோதனைகள், மருத்துவர் கட்டணம், அறுவை சிகிச்சை அறை மற்றும் ஐசியு கட்டணங்கள், மற்றும் உள்வைப்புகள் (implants) ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம், அரசு அறிமுகப்படுத்திய 89 தொகுப்புகளுடன் கூடுதலாக, 25 சிறப்புப் பிரிவுகளில் 1,667 சிகிச்சை தொகுப்புகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பிட்ட தொகுப்புகளில் வராத சிகிச்சைகளுக்கும், குறிப்பிடப்படாத தொகுப்புகள் (unspecified packages) உள்ளன. மருத்துவமனையில் சேருவதற்கு மூன்று நாட்களுக்கு முந்தைய மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு 15 நாட்கள் வரையிலான செலவுகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உட்பட, KASP திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்.
இத்திட்டம் 18.02 லட்சம் குடும்பங்களுக்கான முழு பிரீமியத்தையும் செலுத்துகிறது. மீதமுள்ள 23.97 லட்சம் குடும்பங்களுக்கு, மாநில அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.418.8 செலுத்துகிறது. மீதமுள்ள தொகையை மத்திய அரசு செலுத்துகிறது. 'காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா பத்வதி' (KASP) திட்டம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்லது வயது போன்ற எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அல்லது தனிநபருக்கும் எந்தவித முன்னுரிமை அல்லது பதிவு கட்டணமும் இன்றி இந்த சலுகைகள் கிடைக்கும். தற்போது, கேரளாவில் உள்ள 197 அரசு மருத்துவமனைகள், நான்கு மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் 364 தனியார் மருத்துவமனைகளில் KASP திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டம் குறித்து நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் மேலும் கூறுகையில், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள, KASP திட்டத்தில் பயனாளிகளாக இல்லாத குடும்பங்கள், 'கருண்யா பெனவலன்ட் ஃபண்ட்' (KBF) திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். சிறுநீரக நோய்களுக்கு, ரூ.3 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். KBF சலுகைகளை KASP சிகிச்சை வழங்கப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் பெறலாம்" எனக்கூறினார்.





















