மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மருத்துவமனையில் அனுமதி:


மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மருத்துவமனை அறிக்கை:


இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதலமைச்சரானபுத்ததேவ் பட்டாச்சார்யா(79) ஜூலை 29, 2023 அன்று குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்று மற்றும் வகை II சுவாசக் கோளாறு ஆகிய பிரச்னைகள் காரணமாக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆக்ஸிஜன் செறிவு 70 சதவீதமாக மோசமடைந்ததால் சுயநினைவை இழந்துள்ள பட்டாச்சார்யா வெண்டிலேஷனில் வைக்கப்பட்டுள்ளார். தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அறிக்கை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அவர் ஹீமோடைனமிக் ரீதியாக நிலையாக உள்ளார்.  பல்வேறு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


யார் இந்த புத்ததேப் பட்டாச்சார்யா:


கடந்த 2000 முதல் 2011ம் ஆண்டு வரை மேற்குவங்கத்தின் முதலமைச்சராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, 5 தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் சேவையாற்றியதன் மூலம் தேசிய அளவில் மிகவும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவராக கருதப்படுகிறார். முதுமை மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாததால் ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


11 வருடங்கள் முதலமைச்சர்:


சுதந்திர இந்தியாவில் தேர்தல் முறையின் மூலம் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. நிலச்சீர்த்திருத்தம், நிலமில்லா விவசாயிகளுக்கு நிலம் என சோசலிச பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டதை பின்பற்றி தான்,  பல்வேறு மாநிலங்களில் நிலச்சீர்த்திருத்தம் நடைபெற்றது.


இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசில் புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராக செயல்பட்டார். அப்போது, மேற்குவங்கத்திற்கு அதிக முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை கொண்டு வர மாநிலத்தில் தொழில்மயமாக்கல் இயக்கத்தை தொடங்கினார். அவரது அரசாங்கத்தின் கீழ் மேற்கு வங்கம் ஐடி மற்றும் சேவைத்துறையில் முதலீடுகளைக் கண்டது.


இருப்பினும், விவசாயத்தை முதன்மையான வருமான ஆதாரமாகக் கொண்ட மேற்கு வங்கத்தின் முகத்தை மாற்றுவதற்கான தொழில்மயமாக்கல் உந்துதலைத் தொடங்குவதன் மூலம் புத்ததேவ் தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆபத்தை 2011ம் ஆண்டு தேர்தலில் எதிர்கொண்டார். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதும், புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த 2015-ல் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார், அதன்பின் 2018-ல் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.