விவசாயிகள் போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிவிட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என, இந்திய அரசு மிரட்டியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இந்தியா மீது குற்றச்சாட்டு:


டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, பிரேக் பாயிண்ட்ஸ் எனும் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவர் பெற்ற அனுபவங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, வெளிநாட்டு அரசாங்கங்களால் நீங்கள் ஏதேனும் அழுத்தத்தை எதிர்கொண்டு இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்திய அரசின் மீது அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மிரட்டிய மத்திய அரசு:


அதன்படி, ”விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், அரசாங்கத்தை விமர்சிக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் டிவிட்டர் கணக்குகள் தொடர்பாகவும் எங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த நாடு இந்தியா. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம் என கூறினர். டிவிட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவிலிருந்து இந்த வார்த்தை கூறப்பட்டது,  டிவிட்டர் நிறுவன ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு விடுவோம் என்றார்கள், ஆமாம் அதை அவர்கள் சொன்னார்கள்.  டிவிட்டர் நிறுவனம்  நாங்கள் சொல்வதை பின்பற்றவில்லை என்றால் உங்கள் அலுவலகங்களை மூடுவோம் என்று ஜனநாயக நாடான இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன” என ஜாக் டோர்சி கூறினார். அதோடு, தனக்கு துருக்கி உட்பட மற்ற நாடுகள் உடன் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த அவர்,  இந்தியாவை மிகவும் ஒத்த நாடு தான் துருக்கி எனவும் கூறினார்.


விவசாயிகள் போராட்டம்:


மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என, 2020ம் ஆண்டு நவம்பர் முதல் விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. வெளிநாடுகளில் இருந்தும் பலர் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


சட்டங்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு:


விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு அடிபணிந்த மத்திய அரசு, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 வேளாண்சட்டங்களையும் திரும்பப் பெற்றது. இதனை பிரதமர் மோடியே அறிவித்ததோடு, விவசாயிகளை நம்ப வைப்பதில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டதாக, டிவிட்டர் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி கூறி இருப்பது பெரும் பேசு பொருளாகியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது என சாடி வருகின்றனர்.


மத்திய அமைச்சர் விளக்கம்:


இதுதொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ”ஜாக் டோர்சியின் கருத்துகள் அப்பட்டமான பொய். டோர்சியின் குற்றச்சாட்டுகள் என்பது அவரது தலைமையில் மிகவும் சந்தேகத்திற்குரிய காலகட்டமாக இருந்த ட்விட்டர் வரலாற்றை தூய்மையாக்குவதற்கான ஒரு முயற்சி” என்றார்.