ஏர் இந்தியா நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து மீண்டும் டாட்டா நிறுவனத்திடம் கைமாறியது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக இல்கர் அய்சியை டாடா நிறுவனம் நியமித்திருந்தது. இவர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இதற்கு முன்பாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டத்தை இல்கர் அய்சி ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “கடந்த மாதம் ஏர் இந்திய நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பதவியை நான் ஏற்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்பின்னர் ஒரு சில பத்திரிகைகள் என்னுடைய நியமனம் தொடர்பாக சில கருத்துகளை வெளியிட்டன.
அந்த கருத்துகள் மற்றும் விமர்சனங்களை கருத்தில் கொண்டு டாட்டா நிறுவனத்தின் இந்தப் பதவியை நான் ஏற்க வேண்டாம் என்று முடிவை எடுத்துள்ளேன். ஒரு தொழில்திபராகவும் என்னுடைய குடும்பத்தின் மீது அக்கரை கொண்ட நபராகவும் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். இப்படிப்பட்ட சூழலில் நான் அந்தப் பதவியை ஏற்பது எனக்கு நல்லதாக இருக்காது. கனத்த இதயத்துடன் என்னுடைய முடிவை டாட்டா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன். டாட்டாவின் ஏர் இந்தியா சிறப்பான வளர்ச்சியை அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் பகுதியில் 1971ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். 1994ஆம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழக்கத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்னர் லண்டன் லீட்ஸ் பல்கலைக்கழக்கத்தில் 1995ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு மர்மரா பல்கலைக் கழகத்தில் இவர் சர்வதேச உறவுகள் தொடர்பாக பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்னர் இவர் துருக்கியில் பல தொழில்களை தொடங்கினார். 2015ஆம் ஆண்டு துருக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பதவியை கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 1932ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி டாட்டா தொடங்கினார். 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது மீண்டும் அதன் பங்குகளை அரசி விற்பனை செய்தது. அதில் ஏர் இந்தியாவை டாட்டா நிறுவனம் மீண்டும் வாங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் டாட்டா நிறுவனம் மீண்டும் ஏர் இந்தியாவை நிர்வாகிக்கும் உரிமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்