தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார் .


அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள். அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளும் தன் பதவியைவிடாமல் முதல்வர் ஜெயலலிதா மூலம் தக்கவைத்துக்கொண்டவர் யார் என்றால் அது, அப்போது ஆளுநராக இருந்த  ரோசய்யாவாகத்தான் இருக்கும்


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள விம்மூர் கிராமத்தில் 1933-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கே.ரோசய்யா, 2009 - 2010 வரை ஆந்திர மாநில முதல்வராகப் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்து வந்தார். 2016ஆம் ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிந்தது. 




தமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா பதவியேற்றபோது, ‘‘நேற்றுவரை தீவிர அரசியல்வாதியாக இருந்தேன். இன்று, அரசியல்வாதியாக இல்லாமல் தமிழக கவர்னராகிவிட்டேன். தமிழகத்துக்கு ஓர் ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் இருப்பேன். அரசியலைமைப்புச் சட்டப்படி தமிழக அரசு செயல்படுவதை உறுதி செய்வதே எனது பணியாகும். தமிழக கவர்னர் என்கிற முறையில் எனது கடமையைச் சட்டப்படி சரிவரச் செய்வேன். தேவைப்படும்போது பத்திரிகையாளர்களை அழைத்துக் கலந்துரையாடுவேன்’’ என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். ஆனால், பதவியேற்ற நாள் முதல் பதவி காலம் முடியும் நாள்வரை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக நடந்துகொண்டார் என்பதே 100 சதவிகிதம் உண்மை.


2016 சட்டபேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதனால் தஞ்சை, அரவக்குறிச்சி  தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு அதிமுகவை முந்திக்கொண்டு ஆளுநர் ரோசைய்யா தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தார். ஆனால் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலையே ரத்துசெய்த தேர்தல் கமிஷன், ‘‘இப்படி கவர்னர் நடந்துகொண்டதைத் தவிர்த்து இருக்கலாம்’’ என ரோசய்யாவுக்கு பதில் அளித்தது. 


2011-ல் ரோசய்யாவை தமிழக கவர்னராக நியமித்தது, அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ். ஆனால் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் பல காங்கிரஸ் கவர்னர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் ரோசய்யா மட்டும் விதிவிலக்கு. அதற்கு காரணம் அவருக்கு ஜெயலலிதாவிடம் இருந்த மரியாதை. 




ரோசய்யா காங்கிரஸ்காரராக இருந்தாலும் காங்கிரஸ்காரரை விட அதிமுகவினர் மீதே அவருக்கு அதிக பாசம் இருந்தது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்னவென்றால், துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்ல, அவர் மீது அவதூறு வழக்குப் போட்டார் கவர்னர் ரோசய்யா. இத்தனைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் காங்கிரஸ்காரர்தான். அந்த அளவுக்கு அ.தி.மு.க பாசக்காரர் ரோசய்யா.


இதேபோல் தமிழக அமைச்சர்கள் மீது எதிர்க் கட்சிகள் ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை. 


தமிழக சட்டப்பேரவை வைரவிழாவின்போது தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரை ரோசய்யா சொல்லவில்லை. இதுதொடர்பாக அப்போது கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘வைரவிழாவில் ஆளுநர் ரோசய்யா தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்திச் சொன்னார். ஆனால், என் பெயரை மட்டும் விட்டுவிட்டார். அவர் நல்ல மனிதர். யாருக்கும், எதற்கும் பயப்படாதவர். வேண்டும் என்று விட்டிருக்கமாட்டார்’’ என்று கூறியிருந்தார்.


2011 ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்றுகொண்ட ரோசய்யா, கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருந்தார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன். அப்போது ஆளுநராக இருந்த ரோசைய்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


குழந்தைகள் வன்முறைக்கு சிக்கி சீரழிந்தது, குழந்தைகள் மது குடித்த கொடுமை, போன்றவை அவர் பதவியில் இருந்தபோது அரங்கேற தவறவில்லை. 




விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னைகள் எழும்போதும் முழுக்க முழுக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்ததோடு, ஜெயலலிதாவின் முடிவை வரவேற்பதாக அறிவிப்பு வெளியிட்டார். இவர் பதவி நேரத்தில்தான் தலைவா, கத்தி போன்ற படங்களுக்கும் பிரச்னை எழுந்தது. அவருடைய பதவிகாலம் முடிந்ததும் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையின் அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர். 


நேரு முதல் பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகிய தலைவர் ரோசய்யா. பல காலம் அமைச்சர் பதவியில் இருந்து சாதனை படைத்தவர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் நிதியமைச்சராக 16 முறை இவர் இருந்துள்ளார். 16 பட்ஜெட் போட்டுள்ளார். அதிலும் 7 பட்ஜெட்டை தொடர்ந்து போட்டுள்ள சாதனையாளர். இது இந்திய அளவில் ஒரு சாதனையாகும்.