ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தடுப்பூசி விவகாரத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளால் தேச விரோதி எனக் கருதப்பட வேண்டும் என வெளிப்படையாக விமர்சித்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 அன்று, தனியார் செய்தி தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரகுராம் ராஜன், கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் `பஞ்சஜன்யா’  வார இதழில் இன்போசிஸ் நிறுவனம் நடத்தி வரும் வருமான வரிக்கான இணையதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்நிறுவனத்தைத் தேச விரோதி எனக் குறிப்பிட்டதற்காக இவ்வாறு கூறியுள்ளார். 


இன்போசிஸ் நிறுவனத்தைத் தேச விரோதி என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பஞ்சஜன்யா இதழில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரகுராம் ராஜன், தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொண்ட விதத்தையும் தேச விரோதம் என்று யாராவது கூறிலாம் என்றும், மனிதர்கள் தவறு செய்வது இயல்பு என்று ஜி.எஸ்.டி வரி விதிப்பில் நிகழ்ந்த குளறுபடிகளை உதாரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். 



ரகுராம் ராஜன்


 


கடந்த மாதம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு அதிகாரியை, வருமான வரித்துறை இணையதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து பேசுவதற்காக அழைத்திருந்தார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்தி மொழி வார இதழான `பஞ்சஜன்யா’வில் இன்போசிஸ் நிறுவனம் மீண்டும் மீண்டும் தவறு செய்வதாகவும், அதன் நோக்கம் இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. 


இதுகுறித்துப் பேசிய ரகுராம் ராஜன், `தனியார் நிறூவனங்களை மோதல் போக்குடன் அணுகுவது அவர்களது வர்த்தகத்தைப் பாதிக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். பெரு நிறுவனங்கள் அரசுடன் மோதலில் ஈடுபடுவதற்கு அஞ்சுகின்றன. இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய் ஒரு நேர்காணலில், அரசும், இன்போசிஸ் நிறுவனமும் வருமான வரித்துறை இணைய தளத்தின் கோளாறுகளுக்குக் காரணம் எனச் சுட்டிக் காட்டியிருந்தார். இந்தப் பிரச்னை, இரு தரப்பிலும் இருக்கும் திறனுக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான இடைவெளி காரணமாக எழுகிறது’ எனக் கூறியுள்ளார். 



ரகுராம் ராஜன்


 


`இந்தியப் பொருளாதாரத்தில் தொழில்துறை சிறிது முன்னேற்றம் அடைந்து வருகிறது. எனினும், இந்தியாவில் அனைத்து துறைகளுக்கும் மீண்டெழுவதற்கு அரசு உதவ வேண்டுமா, அல்லது சில துறைகளுக்கு மட்டும் உதவ வேண்டுமா என்ற சந்தேகம் இருக்கிறது’ என அவர் கூறியுள்ளார். 


மேலும் அவர், `மாநில அரசுகளின் நிதி நிலைமை மிகவும் மோசமைந்துகொண்டே வருகிறது. மாநில வருவாய்களை மத்திய அரசு செஸ் வரி என்ற பெயரில் விழுங்கி வருகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை மத்தியில் இருந்து மட்டும் ஆட்சி செலுத்த முடியாது. அதுவும் `மத்திய அரசுக்குள் மற்றொரு மத்திய அரசு’ என்று ஆட்சி செய்ய முடியாது. அதிகாரத்தை மத்தியில் குவித்திருப்பது இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது’ எனவும் கூறியுள்ளார்.