பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் அளித்த பங்களிப்பினை பாராட்டி இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம், பிரிட்டன் சர்வதேச வர்த்தகத்துறை இணைந்து ( India-UK Achievers Honours) அறிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்ற இந்திய மாணவர்களின் சாதனைகளை கெளரவிற்க்கும் விதமாக, இந்தியா - பிரிட்டன் சாதனையாளர்கள் விருதை (India-UK Achievers Honours) தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் (National Indian Students and Alumni Union (NISAU)), இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டனின் சர்வதேச வர்த்தகத் துறை (Department for International Trade (DIT)) உள்ளிட்டவை இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன.
அந்தவகையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, முதன் முறையாக இந்தியா- பிரிட்டன் சாதனையாளர் விருதுகள் தங்களது துறைகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்தவர்கள் 75 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவரான மன்மோகன் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளா் விருது கடந்த வாரம் பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பிரிட்டன் நட்புறவில் முக்கிய பங்கு வகிக்கும் சிலருக்கும் சிறந்த ஆளுமைக்கான சாதனயாளா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியான பில்லிமொரியா ( Karan Bilimoria), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி. வீரேந்திர சர்மா (Virendra Sharma)
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா (Parineeti Chopra), ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடா்பாளா் (Aam Aadmi Party (AAP)) ராகவ் சாதா (Raghav Chadha), சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலா் ஆதா் பூனாவலே (Adar Poonawalla) இந்திய மகளிர் கால்பந்து அணியின் கோல் கீப்பர் அதிதி செளவுகான் (Aditi Chauhan) உள்ளிட்டோருக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் பொருளாதாரம், அரசியல் வாழ்வில் ஆற்றியுள்ள பல்வேறு சாதனைகளை கெளவுரவிக்கும் வகையில் இந்த விருது மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கிடம் மாணவர் சங்கத்தினர் கூடிய விரைவில் அளிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணராவார். 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது தொடர்பாக தனது மகிழ்ச்சியினை கடிதம் மூலம் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அவர் எழுத்துபூா்மாக வெளியிட்ட செய்தியின் விவரம்:
” வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்களித்திருப்பது குறித்து மனம் மகிழ்கிறேன். நம் நாட்டின் எதிா்காலமாக திகழும் இளைஞா்கள், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை அா்த்தமுள்ளதாக மாற்றும் இளைஞர்களிடமிருந்து இந்த விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா- பிரிட்டன் இடையேயான உறவு கல்வி வளர்ச்சியினாலும் வரையறுக்கப்படுகிறது. நம் நாட்டின் முன்னோடி தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவர்ஹா்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கா், சா்தாா் படேல் மற்றும் பலா் பிரிட்டனில் கல்வி பயின்று, மாபெரும் தலைவா்களாக விளங்கினா்.இவர்களின் செயல்பாடுகள் உலகிற்கே உத்வேகம் அளிக்கும் வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.” என்று அவர் கூறினார்.